மேற்குலக நாடுகளைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்கள் சிரியாவின் ஹோம்ஸ் நகரில் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது நடந்த எறிகணைத் தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டதாக அரச எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையின் மேரி கோல்வின் மற்றும் பிரஞ்சு புகைப்பட நிபுணர் ரெமி ஒச்லிக் ஆகிய இருவர் தான் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் என்று பிரஞ்சு அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஹோம்ஸ் நகரின் பாபா அமர் பிரதேசத்தில் செயற்பட்டுவந்த தற்காலிக ஊடக மையத்தின் மீது ஏறிகணைத் தாக்குதல் நடந்தபோது மேலும் பலரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாபா அமர் என்கிற பகுதியில் இந்த இரண்டு ஊடகவியலாளர்கள் தங்கியிருந்த வீடு, அரச எதிர்ப்பாளர்களின் தற்காலிக ஊடக மையமாக செயற்பட்டுவந்தது. புதன்கிழமை காலை இந்த கட்டிடத்தின்மீது ஏறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த கட்டிடத்திலிருந்தவர்கள் வெளியே ஓடியபோது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் சடலங்களை காட்டும் காணொளி வெளியிடப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
மேலும் குறைந்தது மூன்று வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் காயமடைந்திருப்பதாகவும் அரச எதிர்ப்பாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
கடந்த மார்ச் மாதம் சிரிய தலைவர் பஷர் அல் அசாத்த்துக்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பித்தது முதல் மேற்குலக செய்தியாளர்கள் சிரியாவுக்குள் பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை.
ஆனாலும் அரச எதிர்ப்பு செயற்பாட்டாளர்களின் துணையுடன் பெரும் ஆபத்துக்களுக்கு மத்தியில் செய்தியாளர்கள் அங்கே சென்றபடி இருக்கிறார்கள்.
பிரஞ்சு நாட்டின் தொலைக்காட்சி ஊடகவியலாளர் கில்லிஸ் ஜாக்குயர், சிரிய அரசு ஏற்பாடு செய்திருந்த பயணத்தில் ஹோம்ஸ் நகருக்கு சென்றபோது கடந்தமாதம் கொல்லப்பட்டார்.
‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையின் புகழ்பெற்ற வெளிநாட்டு செய்தியாளரான மேரி கால்வின் அமெரிக்காவில் பிறந்தவர். பல ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்தார்.
உலகின் போர் நடக்கும் பிரதேசங்களில் அவர் இதற்கு முன்னரும் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். கொசோவோ, செசென்யா மற்றும் பல அரபு நாடுகளிலும் அவர் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
2001-ஆம் ஆண்டு இலங்கையின் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இருந்து அவர் செய்தி சேகரித்தபோது அவருக்கு ஏற்பட்ட காயத்தில் அவர் தனது ஒரு கண்ணை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.