நேசனல் ஃபீட்லோட் கார்பரேசன்(என்எப்சி), அதன் இயக்குனர் வாரியத்துக்குத் தெரியாமலேயே சொத்துக்களில் முதலீடு செய்துள்ளது என த சன் நாளேடு அறிவித்துள்ளது.
அவ்வாரியத்தில் உள்ள அரசு பிரதிநிதிகள் மூவரும், ஆடம்பர கொண்டோமினியம்கள் வாங்கிய விசயத்தை ஊடகங்களில் படித்துத்தான் தெரிந்துகொண்டார்கள் என்று அந்நாளேடு கூறியது.
அமைச்சர் ஷரிசாட் அப்துல் ஜலிலின் குடும்பத்தாருக்குச் சொந்தமான அந்நிறுவனத்தின் நிதிகள் தவறான முறையில் செலவிடப்பட்டதாகக் கூறப்படுவதன்மீது நடைபெறும் “விசாரணைகளுக்கு அணுக்கமான” வட்டாரங்களிலிருந்து இத்தகவல் கிடைத்ததாகக் கூறும் த சன், முதலீடுகளுக்கு வாரியத்தின் ஒப்புதல் சட்டப்படி அவசியமான ஒன்று எனக் கூறியது.
“நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் வாரியக் கூட்டங்களில், அதன் தொடர்பில் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டதற்கோ நிறைவேற்றப்பட்டதற்கோ சான்றுகள் இல்லை என்று விசாரணை அதிகாரிகள் கூறுகிறார்கள். விசாரணைகள் அடுத்த சில நாள்களில் முடிவுறலாம்”, என்றது குறிப்பிட்டது.
இயக்குனர் வாரியத்தில் அரசாங்கப் பிரதிநிதிகளாக அலியாஸ் முகம்மட் யாசின்(விவசாய அமைச்சு),மானாப் உசேன்(நிதி அமைச்சு), நெகிரி செம்பிலான் மாநிலச் செயலாளர் மாட் அலி ஹசான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அரசாங்கம் வழங்கிய ரிம250மில்லியன் கடன் பயன்படுத்தப்பட்ட விதம் பற்றி இயக்குனர்களுக்குத் தெரியாது என்று அந்நாளேடு கூறியது.
அரசு இயக்குனர்களுக்கு மாத அலவன்சாக ரிம750 மட்டுமே கொடுக்கப்பட்டது.ஆனால்,மற்ற இயக்குனர்களுக்குப் பெரிய சம்பளமும் மேலதிக சலுகைகளும் கொடுக்கப்பட்டன.ஆனால், அது பற்றி பற்றி எதுவும் சொல்லும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை என்று தெரிகிறது
“ஊதியங்கள், அன்றாட அலுவல்கள், நிர்வாகம் எல்லாவற்றையும் சிஇஓ(தலைமை செயல் அதிகாரி)வான் ஷஹினுர் இஸ்மிர் சாலே-யே கவனித்துக்கொள்வார்”, என்றந்த ஏடு குறிப்பிட்டது.சிஇஓ மகளிர்,குடும்ப,சமூக மேம்பாட்டு அமைச்சரின் புதல்வராவார்.
இஸ்மிர், இம்மாதத் தொடக்கத்தில் நிறுவனத்துக்கு எளிய நிபந்தனைகளில் வழங்கப்பட்ட கடன் தொடர்பான ஒப்பந்தம் மற்ற துறைகளில் முதலீடு செய்வதைத் தடுக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.