தேர்தல் சீர்திருத்தங்கள் மீது பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு தெரிவித்துள்ள விரிவான மாற்றங்கள் அமலாக்கப்படுவது 13வது பொதுத் தேர்தல் எப்போது நிகழும் என்பதைப் பொறுத்துள்ளது.
இவ்வாறு பிஎஸ்சி தலைவர் டாக்டர் மாக்ஸிமுஸ் ஒங்கிலி கூறியிருக்கிறார். சில மாற்றங்கள் செய்யப்படும் வேளையில் சில மாற்றங்கள் அடுத்த பொதுத் தேர்தலில் அமலாக்கப்படாமல் போகலாம் என்றார் அவர்.
“அடுத்த பொதுத் தேர்தல் இன்னும் ஒர் ஆண்டு இருந்தால் எல்லா மாற்றங்களும் சாத்தியம்,” என அவர் லண்டனில் மலேசியப் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.
ஐரோப்பாவில் தேர்தல் நடைமுறைகளையும் வாக்காளர் பதிவு நடைமுறைகளையும் ஆய்வு செய்வதற்காக அவர் தமது குழுவினருடன் லண்டன் சென்றுள்ளார்.
பிரிட்டனுக்கான மலேசியத் தூதர் ஸாக்காரியா சுலோங் பிஎஸ்சி குழுவினருக்கு அளித்த விருந்தில் கலந்து கொள்ளும் முன்னர் அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார்.
13வது பொதுத் தேர்தலுக்கான தேதி இன்னும் நிச்சயமாகத் தெரியாததால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்னர் அனைத்து தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகளையும் முழுமையாக அமலாக்குவது நல்லது என அந்தக் குழுவின் ஒர் உறுப்பினரான அஸ்மின் அலி கேட்டுக் கொண்டார். அவர் பிகேஆர் துணைத் தலைவரும் கோம்பாக் எம்பி-யும் ஆவார்.
மாற்றங்கள் முக்கியமானது என்றாலும் நாட்டின் தேர்தல் முறை மீது மக்கள் நம்பிக்கையை தொடர்ந்து வலுப்படுத்துவது அவசியம் என அங்கு இருந்த உலு சிலாங்கூர் எம்பி பி கமலநாதன் கூறினார்.
“நாங்கள் எடுத்துள்ள யோசனைகள், கூறியுள்ள மாற்றங்கள் முக்கியமானவை. என்றாலும் அடுத்து வரும் தேர்தலுக்கு மட்டுமின்றி எதிர்காலத் தேர்தல்கள் அனைத்துக்குமான தேர்தல் சீர்திருத்தங்கள் என்னும் பெரிய தோற்றத்தில் பிஎஸ்சி கவனம் செலுத்துகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்,” என அவர் சொன்னார்.
அந்தக் குழு தெரிவித்த சில யோசனைகள் மீது தேர்தல் ஆணையம் அண்மைய காலத்தில் அமலாக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
பொதுத் தேர்தலில் அழியாமையைப் பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் பிப்ரவரி 15ம் தேதி அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்டன. உடற்குறையுடைய பதிவு செய்யப்பட்ட வாக்காளர் ஒருவருடன் அவர் தேர்வு செய்யும் நபர் ஒருவர் சென்று அவருக்காக வாக்குச் சீட்டுக்களில் குறியிடுவதற்கு அனுமதிப்பதும் அந்த ஏட்டில் அறிவிக்கப்பட்டது.
பிரிட்டனில் அந்த பிஎஸ்சி குழு பிரிட்டிஷ் எம்பி-க்களையும் இங்கிலாந்து எல்லை நிர்ணய ஆணைய அதிகாரிகளையும் சந்தித்த பின்னர், தொகுதி எல்லைகளை நிர்ணயம் செய்வதை எப்படி மேம்படுத்த முடியும் என்பதில் தெளிவு பெற்றுள்ளதாக டாக்டர் மாக்ஸிமுஸ் சொன்னார்.
வெளிநாட்டில் வசிப்பவர்கள் வாக்களிப்பது
வெளிநாட்டு வாக்களிப்பு- டென்மார்க் மட்டுமே நிபந்தனைகளை விதிக்கவில்லை.
வெளிநாட்டில் வசிக்கும் மலேசியர்கள் வாக்களிப்பது பற்றிக் குறிப்பிட்ட அவர், அந்த விஷயத்தை குழு மிகவும் கவனமாகக் கையாள வேண்டியுள்ளதாகச் சொன்னார்.
அந்த ஆய்வுப் பயணத்தில் சம்பந்தப்பட்டுள்ள மூன்று நாடுகளில் டென்மார்க் மட்டுமே நிபந்தனைகளை விதிக்கவில்லை என்றார் அவர்.
இப்போது அரசாங்க ஊழியர்களும் இராணுவ வீரர்களும் முழு நேர மாணவர்களும் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து வாக்களிக்க முடியு,ம்.
அடுத்து அந்தக் குழு பிராங்பர்ட் செல்லும். அதற்கு பின்னர் பெர்லின், கோபன்ஹேகன் ஆகியவற்றுக்குப் பயணம் மேற்கொள்ளும்.
தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான பிஎஸ்சி-யின் பரிந்துரைகள் அடங்கிய முழு அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஏப்ரல் முதல் வாரத்தில் அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி பிஎஸ்சி தோற்றுவிக்கப்பட்டது. அது தனது பரிந்துரைகளை வழங்குவதற்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.
மாக்ஸிமுஸ், அஸ்மின், கமலநாதன் ஆகியோருடன் முகமட் ராட்சி ஷேக் அகமட், டாக்டர் போங் சான் ஒன், அலெக்ஸாண்டர் நண்டா லிங்கி, டாக்டர் முகமட் ஹட்டா ராம்லி, அந்தோனி லோக், வீ சூ கியோங் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
பெர்னாமா