நஜிப்: சபா ஆர்சிஐ பற்றி இன்னும் ‘பரிசீலிக்கப்படுகிறது’

சபாவில் வாக்குகளுக்காக குடியுரிமை வழங்கப்பட்டதாகக் கூறப்படுவது மீது ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தை அமைப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுவதை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மறுத்துள்ளார்.

“நாங்கள் அதனைப் பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம்,” என அவர் நேற்றிரவு அம்னோ உச்ச மன்றக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

ஆர்சிஐ அமைக்கப்படுமா இல்லையா என்ற கேள்வி அதற்கு முன்னர் அவரிடம் எழுப்பப்பட்டது.

ஆர்சிஐ-யை அமைக்க  பிப்ரவரி 8ம் தேதி அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக பல மூத்த சபா பிஎன் தலைவர்கள் அறிவித்துள்ள வேளையில் நஜிப்பின் பதில் பலருக்கு வியப்பை அளித்துள்ளது.

அந்த ஆர்சிஐ அமைக்கப்படுவது பற்றி கடந்த வாரம் சபாவுக்கு நஜிப் சென்ற போது அறிவிக்கப்படும் என சபா தலைவர்கள் ஆரூடம் கூறியிருந்தனர்.

ஆனால் அவர் ஆர்சிஐ பற்றி எதுவும் சொல்லாமல் சபா பயணத்தை முடித்துக் கொண்டார்.

அந்த ஆணையத்தை அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளதாக  அப்கோ என்ற United Pasokmomogun Kadazandusun Murut Organisation அமைப்பின் தலைமைச் செயலாளர் வில்பிரட் மாடியூஸ் தங்காவ் நேற்று மலேசியாகினியிடம் கூறியிருந்தார்.

அந்த ஆணையம் விசாரிக்க வேண்டிய விஷயங்கள், அதன் உறுப்பினர்கள் பற்றி மட்டுமே இன்னும் பரிசீலிக்கப்படுவதாக அவர் கூறினார்.

ஆர்சிஐ விசாரிக்க வேண்டிய விஷயங்கள் பற்றியும் அதன் உறுப்பினர்கள் பற்றியும் அப்கோ ஏற்கனவே சட்டத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸிடம் தனது யோசனைகளை தெரிவித்துள்ளது.