“சீனர்கள் ஒரங்கட்டப்படுகின்றனர்” என்ற தமது கருத்தில் ஒங் உறுதியாக நிற்கிறார்

இந்த நாட்டில் “சீன வம்சாவளியினர் ஒரங்கட்டப்படுகின்றனர்” என அமெரிக்க அரசதந்திரிகளிடம் தாம் கூறியதை முன்னாள் மசீச தலைவர் ஒங் தீ கியாட் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் தாம் சிறுபான்மை சீன சமூக உணர்வுகளை எடுத்துரைத்தாக  அவர் சொன்னார்.

“ஒரங்கட்டப்படுவது குறித்து சிங்கப்பூர் மதியுரை அமைச்சர் லீ குவான் இயூ வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து எதிரொலித்த சீன சமூக உணர்வுகளையே என் கருத்துக்கள் குறித்தன.”

மலேசியாவிலும் இந்தோனிசியாவிலும் சீன வம்சாவளியினர் ஒரங்கட்டப்பட்டுவதாக சிங்கப்பூரில் 2006ம் ஆண்டு நிகழ்ந்த உலக வங்கி-அனைத்துலகப் பண நிறுவன கூட்டத்திற்கு இடையில்  லீ நிருபர்களிடம்  கூறினார்.

“எங்கள் அண்டை நாடுகள் தங்கள் நாட்டுச் சீனர்களுடன் பிரச்னைகளை எதிர்நோக்குகின்றனர். அவர்கள் வெற்றி அடைந்துள்ளனர். அவர்கள் கடுமையாக உழைக்கக் கூடியவர்கள். அதனால் திட்டமிடப்பட்டு ஒரங்கட்டப்படுகின்றனர்”, என லீ கூறியதாக அறிவிக்கப்பட்டது.

லீ-யின் அறிக்கை மீது ஒங்-கின் கருத்துக்களை அமெரிக்க அரசதந்திரிகள் வினவிய போது தாங்கள் ஒரங்கட்டப்படுவதை மலேசியாவில் உள்ள சீன சமூகம் அறிந்திருப்பதாக ஒங் தெரிவித்தார்.

“மிச்சம்”, “துண்டுகள்” என்ற சொற்கள் ஒப்பீட்டு வருணனைகள்

அரசாங்கத் திட்டங்கள் தொடர்பில் கூறப்பட்ட “மிச்சம்”,”‘துண்டுகள்” என தாம் குறிப்பிட்ட சொற்கள்  சீன வர்த்தக சமூகம் தெரிவித்த கருத்துக்கள் என அவர் மலேசியாகினிக்கு விடுத்த அறிக்கையில் ஒங் குறிப்பிட்டார்.

“‘மிச்சம்’, ‘துண்டுகள்’ என்ற சொற்கள் சில நிறுவனத் தலைவர்களும் தற்செயலாக என்னுடைய தொகுதியில் உள்ள சிறுவணிகர்களும் 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெரிவித்தவை”,என அவர் சொன்னார்.

அமெரிக்க அதிகாரிகளை ஒங் சந்தித்த விவரத்தை தகவல்களை அம்பலப்படுத்தும் வில்கிலீக்ஸ் என்ற இணையத் தளத்தில் கடந்த வாரம் வந்த தகவலை மலேசியாகினி வெளியிட்ட பின்னர் ஒங்-கின் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கோலாலம்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து வாஷிங்டனில் உள்ள அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அனுப்பப்பட்ட அந்த ரகசியச் கேபிள் செய்தியை வில்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது.

“மலேசியாவில் ஒரு காலத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறை மசீச-வுக்கு மிச்சம் கிடைக்கும். ஆனால் இப்போது நாங்கள் அம்னோ மேசையில் ஏதாவது துண்டுகள் கிடைக்குமா என நம்பிக் கொண்டிருக்கிறோம்”, என அவர் சொன்னதாக அந்த கேபிள் செய்தி கூறியது.