கோலாலம்பூரில் பிப்ரவரி 22ம் தேதி கூட்டரசு நீதிமன்றத்தில் உள்ள மூன்று நீதிபதிகள் மீது தமது காலணிகளைத் தூக்கி எறிந்ததின் மூலம் பிரபலமாகி விட்ட இமான் ஹொஸ்லான் ஹுசேன், பள்ளிவாசலில் இது நாள் வரை தாம் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
தாம் சிறுவனாக இருந்த போது துடுக்கான பையனாக இருந்திருக்கலாம். ஆனால் மேலங்கியையும் டர்பனையும் அணியத் தொடங்கிய நாளிலிருந்து சமய நம்பிக்கையுடையவராகத் திகழ்வதாக அவர் சொன்னார்.
அதனால் 2005ம் ஆண்டு கம்போங் பாண்டானில் உள்ள Ar Ramidah பள்ளிவாசலில் imam rawatib -ஆக நியமிக்கப்பட்டது தொடக்கம் அந்தப் பள்ளிவாசல் குழு உறுப்பினர்களிடையே மலிந்திருந்த ஊழல் நடைமுறைகளை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றார் அவர்.
2006ம் ஆண்டு அந்தப் பள்ளிவாசல் நன்கொடைகள் மூலம் திரட்டிய 200,000 ரிங்கிட் சில குழு உறுப்பினர்களுடைய பைகளுக்குள் சென்று விட்டதாக அவர் சொன்னார்.
“வங்கியில் இருந்த தொகைக்கும் நாங்கள் திரட்டிய நன்கொடைகளுக்கு கணிசமான வேறுபாடு இருந்ததை நான் கண்டு பிடித்தேன்,” என அவர் கூறிக் கொண்டார்.
குழு உறுப்பினர்கள் தாங்கள் ஏற்பாடு செய்த நடவடிக்கைகளுக்கான செலவுகளைக் கூடுதலாக காட்டியதுடன் பள்ளிவாசல் கட்டுமான வேலைகளைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாகவும் ஹொஸ்லான் சொன்னார்.
“கொர்பானுக்காக பி கிரேடு மாட்டை தாங்கள் வாங்கியதாக அவர்கள் ஒரு முறை எல்லோரிடமும் கூறினார். ஆனால் எங்களுக்குக் கிடைத்தது சி கிரேடு மாடு ஆகும்,” என்றும் அவர் கூறிக் கொண்டார்.
முன்னாள் குழு உறுப்பினர் ஒருவர் பள்ளிவாசலுக்குச் சொந்தமான நிலத்தில் உணவு விடுதி ஒன்றை நடத்துவதற்கு ஒருவருக்கு அனுமதி அளித்து மாதம் ஒன்றுக்கு 3,000 ரிங்கிட் வாடகையை அபேஸ் செய்து கொண்டிருந்ததாகவும் அவர் கூறிக் கொண்டார்.
அந்த விவகாரத்தை தாம் தொடர்ந்ததால் கூட்டர்சு பிரதேச இஸ்லாமிய விவகாரத் துறை 2006ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி விசாரணை நடத்தி 11 குழு உறுப்பினர்களையும் நீக்கியது என்றும் அவர் சொன்னார்.
கசப்பான உறவுகள்
தீவிர பாஸ் ஆதரவாளரான ஹொஸ்லான் அம்னோ உறுப்பினர்கள் ஆதிக்கம் செலுத்திய பள்ளிவாசல் குழுவுடன் தாம் ஒத்துப் போக முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டார்.
2008ம் ஆண்டு அந்தப் பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராக காலஞ்சென்ற டாக்டர் லோலோ முகமட் கசாலி தேர்வு செய்யப்பட்ட பின்னர் அந்த உறவுகள் மேலும் மோசமடைந்தன.
“புதிய குழு உறுப்பினர்களும் மோசமாக இருந்தனர். நான் கேள்வி எழுப்பிய போது அவர்கள் என்னை வாயை மூடிக் கொண்டிருக்குமாறும் நடவடிக்கை விவகாரங்களில் இமாம் தலையிடக் கூடாது என்றும் கூறினர்.”
“அந்தப் பள்ளிவாசலில் நிகழும் முறைகேடுகள் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், போலீஸ், கூட்டரசுப் பிரதேச அமைச்சு ஆகியவற்றிடம் பல முறை புகார் செய்யப்பட்டது. ஆனால் எந்தப் பலனும் இல்லை,” என ஹொஸ்லான் குறிப்பிட்டார்.
“நாங்கள் 2009ம் ஆண்டு பிரதமர் அலுவலகத்தில் கூட கூட்டம் நடத்தினோம். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.”
அவர் அந்த Ar Rahimah பள்ளிவாசலில் பிலாலாக 2001ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 2005ம் ஆண்டு கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய விவகாரத் துறை அவருக்கு இமாம்-முக்கான சான்றிதழை வழங்கியது.
இதனிடையே ஹொஸ்லான் கூறிய குற்றச்சாட்டுக்களை உறுதி செய்வதற்காக நடப்பு பள்ளிவாசல் குழுத் தலைவருடன் தொடர்பு கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதே வேளையில் நடப்பு இமாம் எந்தக் கருத்தும் கூற மறுத்து விட்டார்.