உங்கள் கருத்து: மலேசியாவுக்கு வயது 48, 54 அல்ல

“மலேசியா 1963ம் ஆண்டுதான் தோற்றம் பெற்றது. அதனால் அதற்கு வயது 54 எனச் சொல்வது தவறு. அவ்வாறு கூறுவது மலேசியா உருவாவதற்கு சபாவும் சரவாக்கும் ஆற்றிய பங்கை அலட்சியம் செய்வதற்கு ஒப்பாகும்.”

 

 

 இன அவநம்பிக்கைக்கு இடையில் 54வது மெர்தேகா

நல்ல மனிதர்கள்: இது மாறுபட்ட விஷயமாக இருக்கலாம். நாட்டின் 54வது சுதந்திர தினம் பற்றி மலேசியாகினி பேசியிருப்பது எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அப்படி ஒன்றுமே இல்லை.

நாடு என்னும் முறையில் மலேசியாவுக்கு இப்போது வயது 48. மலாயா மட்டுமே 1957ல் சுதந்திரம் பெற்றது. சபா, சரவாக் 1963ம் ஆண்டுதான் சுதந்திரம் அடைந்தன. அதற்கு பின்னர் அந்த மூன்று பிரதேசங்களும் இணைந்து மலேசியா என்னும் நாடு உதயமானது. ஆகவே 1963ம் ஆண்டு தொடக்கம் மலேசியா இயங்கி வருகிறது. அதனை இல்லை என்று சொன்னால் அது பொய் ஆகும்.

மலேசியாவுக்கு வயது 54 எனச் சொல்வது மலேசியா உருவாவதற்கு சபாவும் சரவாக்கும் ஆற்றிய பங்கை அலட்சியம் செய்வதற்கு ஒப்பாகும்.

ஆளும் கட்சியின் தேவைகளுக்கு ஏற்ப வரலாறு திருத்தப்பட்டு வருகிறது. ஆனால் மதிப்புக்குரிய மலேசியாகினி போன்ற இணையத் தளங்கள் கூட நமது நாட்டின் உண்மையான வரலாற்றை அறிந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது.

அடையாளம் இல்லாதவன்: 1957 ஆகஸ்ட் 31 குறித்து சரவாக் மக்களுக்கு எந்த உணர்வும் கிடையாது. சபா மக்கள் தங்கள் சுதந்திரத்தை ஆகஸ்ட் 31ம் தேதி கொண்டாடுகின்றனர். ஆனால் அது 1963ம் ஆண்டு தொடக்கம்தான். கனத்த இதயத்துடன தான் அதனைக் கொண்டாடுகின்றனர். ஏனெனில் 1963ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி அவை மீண்டும் தங்கள் சுதந்திரத்தை இழந்தன. ஆட்சியுரிமை கொண்ட நாடு என்னும் நிலையிலிருந்து மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்றாக அவை மாற்றப்பட்டன.

உண்மையில் மலாயா, சபா, சரவாக் ஆகியவற்றைப் பிரதி நிதிக்கும் வகையில் நமது கொடி மூன்று நட்சத்திர, மூன்று கோடுகளைக் கொண்ட கொடியாக இருக்க வேண்டும்.

பால் கெராங்காஸ்: 1963ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி மலேசியா உதயமானது. 54வது ஆண்டு நிறைவு என்பது மலாயாவுக்கு மட்டும்தான். உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடுமாறு சபா, சரவாக் மக்களைக் கட்டாயப்படுத்த வேண்டாம். நேற்று நாடு சுதந்தரமடைந்து 48 ஆண்டுகள் நிறைந்துள்ளன. அதுவே வரலாறு. அதனை விருப்பம் போல் திருத்த முடியாது.

உங்கள் பின்னால்: பல்வேறு இனங்களைச் சார்ந்த மக்கள் தங்களது பாரம்பரிய உடைகளை அணிந்து நடனமாடும் காட்சிகளைக் கொண்ட விளம்பரங்களை நான் தொலைக்காட்சிகளில் பார்த்துள்ளேன்.

அப்போது பல பண்பாடுகள் பற்றியும் ஒவ்வொரு இனத்தின் வலிமையையும் எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது பற்றியும் அமைச்சர்கள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். துங்கு அப்துல் ரஹ்மான் காலம் தொட்டு அத்தகைய உரைகள் நிகழ்த்தப்படுகின்றன.

அதற்கு இடையில் உங்களுக்குத் தெரியாமல் பிடிஎன்-னும்  (தேசியக் குடியியல் பிரிவு) கல்வி அமைச்சு, மற்ற அரசாங்க அமைப்புக்கள் இன வெறியை ஊட்டின. நாம் கொடுத்த வரிப்பணத்தில் அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் வளர்த்தன. அதே வேளையில் மேலாண்மை உணர்வுக்கும் வித்திட்டன.

அரசியல்வாதிகளும் தேசியத் தலைமைத்துவத்திற்குக் குறி வைக்கும் போது குறுகிய நோக்கம் கொண்ட இனவாதப் பாதையைத் தேர்வு செய்தனர்.

ஸ்விபெண்டர்: பல இனத் தன்மையை வலியுறுத்துவதாக அம்னோ வழி நடத்தும் அரசாங்கம் பாசாங்கு செய்கிறது. உண்மையில் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்பதை நீங்கள் கண்கூடாகக் காணலாம்.

அதன் நடவடிக்கைகளிலும் கொள்கைகளிலும் இந்த நாடு ஒரே இனத்தை மட்டும் கொண்டுள்ளது என்பது போல ஒரே சமயம் ஒரே பண்பாடு என்ற கண்ணோட்டம் தென்படுகிறது.

“மலேசியா உண்மையில் ஆசியா” என்னும் விளம்பரத்தில் மட்டும்தான் அது வளமான பலதரப்பட்ட மக்கள் வாழ்வதை “நம்புகிறது”.

நாசிர் ஸிஹ்னி யூசோப் 3999: மலேசியா இன அவநம்பிக்கைக்கு இடையில் வாழவில்லை. மாறாக அது அரசியல் ரீதியில் உருவாக்கப்பட்ட இனப் பிரிவினைக் கொள்கையின் கீழ் வாழ்கிறது. மலாய்க்காரர்கள் அரசியல் ஆதிக்கம் செலுத்தினாலும் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும்பகுதி இன்னும் சீனர்களிடமே உள்ளது.

புதிய பொருளாதாரக் கொள்கை மலாய்க்காரர்களுக்கும் மலாய்க்காரர் அல்லாதாருக்கும் இடையிலான பொருளாதார இடைவெளியை சரி செய்திருக்க வேண்டும். ஆனால் ஊழலும் அந்த முறையில் காணப்பட்ட முறைகேடுகளும் அதன் வெற்றிக்கு பெரும் தடையாக இருந்தன.

பக்காத்தான் ராக்யாட் ஆட்சிக்கு வந்தாலும் சமூக, பொருளாதார பகிர்வு சம நிலையை அடைவதற்கு அந்தக் கொள்கை தொடர வேண்டும். அப்போது நாம் தேசிய நிலைத்தன்மை, இனச் சமநிலை பற்றிப் பேசலாம்.

அடையாளம் இல்லாதவன்_40dc: அவநம்பிக்கைக்கான விதைகள்: மலாய் கண்ணோட்டத்தில் மலாய்க்காரர் அல்லாதவர்கள் குறிப்பாக சீனர்கள் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்திய போதிலும் இன்னும் அதிகம் அதிகமாகக் கோருகின்றனர். 

மலாய்க்காரர் அல்லாதவர்களைப் பொறுத்த மட்டில் மலாய்க்காரர்கள் பேராசை பிடித்தவர்கள். எல்லாவற்றையும் தாங்களே வைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.

உண்மையில் எல்லா மலாய்க்காரர்களும் நன்மை அடையவில்லை. அம்னோ/பிஎன் உயர் தலைவர்களும் இன வேறுபாடின்றி அவர்களுடைய சேவகர்களும் மட்டுமே பயன் அடைந்துள்ளனர். நம்மைச் சுற்றிப் பாருங்கள். யார் செல்வந்தர்கள் என்பது தெரியும்.

சாதாரண மலாய்க்காரர்களுக்குத் துண்டுகள் மட்டுமே கிடைக்கின்றன. அவர்களில் பலர் இன்னும் ஏழ்மையில் உழல்கின்றனர். அம்னோ அடி நிலைத் தலைவர்களும் அப்படித்தான் வாழ்கின்றனர். ஆனால் அவர்கள் தலைவர்கள் சொகுசாக வாழ்கின்றனர். அவர்களுக்கு அகங்காரமும் பிடித்துள்ளது.