பினாங்கு தலைமைப் போலீஸ் அதிகாரி: லினாஸ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அகங்காராமக நடந்து கொண்டனர்

குவாந்தானில் நடைபெற்ற Himpunan Hijau 2.0 பேரணியுடன் ஒருமைப்பாட்டுக் கூட்டத்தை பினாங்கில் நடத்திய ஏற்பாட்டாளர்கள் அந்த நிகழ்வு பற்றி போலீசாருக்குத் தெரிவிக்காததின் மூலம் அகங்காராமாக நடந்து கொண்டதாக பினாங்கு போலீஸ் படைத் தலைவர் அயூப் யாக்கோப் கூறினார். அந்த நிகழ்வில் இரண்டு பத்திரிக்கையாளர்கள் காயமடைந்தனர்.

பினாங்கு எஸ்பிளனேட்டில் மாலை 6 மணிக்கு நிகழ்ந்த அந்த நிகழ்வு பற்றி போலீசாருக்கு முன் கூட்டியே தெரிவிக்கவில்லை என அவர் சொன்னார்.  அதனால் அந்த நிகழ்வைக் கண்காணிக்க போலீசார் குழுவை அனுப்ப முடியவில்லை.

ஏற்பாட்டாளர்கள் போலீசாருக்கு முன்கூட்டியே தெரிவித்து அந்த விஷயத்தை போலீசாருடன் விவாத்திருந்தால் கண்காணிப்புக் குழு அந்த இடத்துக்கு அனுப்பப்பட்டிருக்கும்.

“ஏற்பாட்டாளர்கள் கடைசி நேரத்தில் எங்களுடன் தொடர்பு கொண்டனர். நிலைமை பதற்றமாக மாறியதும் நாங்கள் ஒரு குழுவை அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.” அயூப் மலேசியாகினியிடம் பேசினார்.

சீன மொழி நாளேடான குவோங் வா யிட் போ-வைச் சேர்ந்த அந்த இரு பத்திரிகையாளர்களையும் அடையாளம் தெரியாத நபர்கள் தலைக் கவசத்தினால் தாக்கப்பட்டனர்.
 
முதலமைச்சர் உரை கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டது

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் லினாஸ் எதிர்ப்பு பேரணிகளில் பினாங்கு நிகழ்வுக்கு  மட்டுமே இடையூறு ஏற்பட்டது. பேராக், கோலாலம்பூர், குவாந்தான் ஆகியவற்றில் அந்தப் பேரணிகள் சுமூகமாக நடைபெற்றன.

“Hidup BN, Hidup Umno” என முழங்கிய 50 பேர் பினாங்குப் பேரணிக்கு இடையூறு செய்தனர். அந்தப் பேரணியில் பச்சை நிற டி சட்டைகளை அணிந்திருந்த 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

லினாஸ் ஆதரவுக் குழு, முதலமைச்சர் லிம் குவான் எங்கின் உரையைத் தடுக்கவும் முயன்றது. அந்தக் குழுவைச் சார்ந்தவர்கள் லிம்-முக்கு எதிராக ஆபாச வார்த்தைகளை கூறினார். லிம் பினாங்கு மக்களிடம் பொய் சொல்வதாகவும் அவர்கள் கூறிக் கொண்டனர்.

பல அம்னோ பெர்க்காசா உறுப்பினர்கள் லினாஸ் ஆதரவுக் குழுவில் காணப்பட்டனர். அவர்கள் பினாங்கில் நிகழும் லிம் எதிர்ப்புக் கூட்டங்களில் அடிக்கடி காணப்பட்டுள்ளனர்.

லினாஸ் தொழில் கூடம் பினாங்கு பிரச்னை அல்ல என்றும் அவர்கள் வாதிட்ட்டனர்.

இது போன்ற சூழ்நிலைகளில் பேரணிகளில் பங்கு கொள்வோருடைய பாதுகாப்பை உறுதி செய்வது ஏற்பாட்டாளர்களுடைய பொறுப்பு என அயூப் சொன்னார்.

போலீசார் சம்பந்தப்பட வேண்டாம் என ஏற்பாட்டாளர்கள் கருதும் போது அந்த நிகழ்வு அமைதியாக நடப்பதை உறுதி செய்யும் கடமை அவர்களுக்கு உள்ளதாக அயூப் தெரிவித்தார்.

“அத்தகைய எதிர்ப்புப் பேரணிகளின் போது எதுவும் நடக்கலாம் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொருவரும் பேச்சுச் சுதந்திரத்தை விரும்புகின்றனர். பொது இடங்களில் பேசவும் அவர்கள் விரும்புகின்றனர். அதனால் எதுவும் நடக்கலாம்,” என அவர் சொன்னார்.

“ஒரு தரப்பு ஒரு பிரச்னையை ஆதரிக்கும் போது இன்னொரு தரப்பு அதனை எதிர்க்கக் கூடும்.”

“நாம் பேச்சு சுதந்திரத்தையும் ஒன்று கூடும் சுதந்திரத்தையும் நாடுகிறோம். ஆனால் நாம் அதற்குத் தயாராக இருக்கிறோமா ?” என அயூப் வினவினார்.