மேபேங்க்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?, தொழிற்சங்கம் கேள்வி

தேசிய வங்கி ஊழியர்கள் சங்கம்(என்யுபிஇ), அண்மையில் தொழிற்சங்கத் தலைவர்கள் இருவரைப் பணிநீக்கம் செய்த மே பேங்க்கின் “சட்டவிரோத செய்கைகளை” மனிதவள அமைச்சு பொறுத்துக்கொண்டிருப்பதாகக் குறைகூறியுள்ளது.

என்யுபிஇ உதவித் தலைவர் அப்துல் ஜமில் ஜலாலுடினும் பொதுப் பொருளாளர் சென் கா பாட்டும், ஜினிவாவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், மே பேங்க்-எதிர்ப்புப் பதாகைகளை ஏந்தி நின்றதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

வங்கியின் செயல் மலேசிய அரசின்மீது வைக்கப்பட்டிருந்த நம்பிக்கையைச் சிதறடித்துவிட்டது என்று என்யுபிஇ(பினாங்கு, கெடா,பெர்லிஸ்)கிளை செயலாளர் சீ ஈ சியு கூறினார்.

“இவ்விவகாரத்தில் அமைச்சும் மேபேங்கும் கூட்டுச் சேர்ந்துகொண்டு வேலை செய்கின்றனவா என்று தீவகற்ப மலேசியா முழுக்கவுள்ள என்யுபிஇ உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்”.  அந்த வங்கி அரசுதொடர்புள்ள ஒரு நிறுவனமாகும்(ஜிஎல்சி).

பணிநீக்கத்தைத் தொடரும் என்யுபிஇ-இன்  நடவடிக்கைகள் மலேசிய தொழிலாளர்களிடயே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் அதன்வழி அவர்கள் ஜிஎல்சி-களிடம் தங்கள் உரிமைகள் பறிபோகாமல் பாதுகாக்க முற்படுவார்கள் என்றும் சீ கூறினார்.

‘நஜிப் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது’

மேபேங்க் “எல்லாச் சட்டங்களையும் மீறியுள்ளது” என்று குற்றம் சாட்டிய சீ, அது அரசாங்கத்துடன் தொடர்புகொண்டது என்பதால் அரசு அதற்கெதிராக நடவடிக்கை எடுக்காதிருக்கிறது என்றார். 

“பிரதமருக்கும் பல கடிதங்கள் எழுதி விட்டோம்.  இதுவரை பதில் இல்லை. அவர் தலையிடவும் இல்லை”, என்றார் சீ.

“நஜிப் அப்துல் ரசாக்கின் மெத்தனம் என்யுபிஇ உறுப்பினர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுக்கும் மனவருத்தமளிக்கிறது”, என்றாரவர்.

“இவ்விவகாரத்துக்குத் தீர்வுகாணாவிட்டால் சில தரப்பினர் இதைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களின் அரசியல் செல்வாக்கைப் பெருக்கிகொள்ள முனையக்கூடும்”, என்றும் அவர் வலியுறுத்தினார். 

வெள்ளிக்கிழமை,மேபேங்குக்கு எதிராக என்யுபிஇ வடக்குக் கிளை உறுப்பினர்கள், லெபோ ஃபார்க்குவாரில் உள்ள  அதன் வட்டார அலுவலகத்துக்கு வெளியில் மறியலில் ஈடுபட்டார்கள்.

அதற்குமுன்பே, ஜனவரியில் தங்கள் சகாக்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளிலும் மறியல்கள் நடத்தப்பட்டன. மேபேங்குக்கு எதிராக போலீசிலும் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

பேங்க்: தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக அவர்கள் நீக்கப்படவில்லை

இவ்விவகாரத்துக்கு மேபேங் தீர்வு காணவில்லை என்றால் அது பன்னாட்டுத் தொழிலாளர் நிறுவனத்தின் (ஐஎல்ஓ) கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்று பொருளக, காப்புறுதி, நிதி நிறுவனத் தொழிற்சங்கங்களுக்கான ஆசிய வட்டார அமைப்பின் (ஆர்ஓபிஐஎப்) தலைவர் சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்தார்.

இந்தோனேசிய பொருளக தொழிற்சங்கத் தலைவர் முகம்மட் பிலாலும் மேபேங்கின் நடவடிக்கையைக் கடிந்துகொண்டிருக்கிறார்.மேபேங்க் இந்தோனேசியாவுக்கு வெளியில் கண்டனக் கூட்டம் நடத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

இதனிடையே மேபேங்க் மனிதவளப் பிரிவின் அதிகாரி நோரா அப்துல் மனாப், அவ்விரு பணியாளர்களும் கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் ஐஎல்ஓ மாநாடு ஒன்றில் கலந்துகொண்டபோது, “மேபேங்க் ஏழை மலேசியர்களைக் கொள்ளையடிக்கிறது” என்று கூறும் பதாகைகளை ஏந்தி இருந்தனர் என்று கூறினார்.

என்யுபிஇ கூறுவதுபோல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அவர்கள் பணிநீக்கம் செய்யப்படவில்லை என்றும் அவர் விளக்கினார்.

“வங்கிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக ”ஊழியர்கள்மீது ஒழுங்குநடவடிக்கை மேற்கொள்ளப்படுவது இது முதல்முறையல்ல என்றும் அவர் சொன்னார்.