பாகாங் கம்பாங்கில் பிகேஆர் செராமாவுக்கு இடையூறு

அம்னோ கோட்டைகளில் நடத்தப்படும் பிகேஆர் செராமா நிகழ்வுகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன.

இந்த முறை பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வாருக்கும் தொடர்புத் துறை இயக்குநர் நிக் நஸாமி நிக் அகமட்-டுக்கும் ரௌடித்தமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாகாங் கம்பாங் Felda Lepar Hilir 1ல் நேற்றிரவு நிகழ்ந்த செரமாவுக்கு உள்ளூர் அம்னோ தலைவர்கள் எனக் கருதப்படுகின்றவர்கள் தொந்தரவு கொடுத்தனர். அவர்கள், நுருல் இஸ்ஸாவும் நிக் நஸாமியும் உரையாற்றிக் கொண்டிருந்த கோப்பிக் கடைக்கு அருகில் ஒலிபெருக்கிகளை வைத்து இடையூறு செய்தனர்.

“எங்கள் செராமாவில் நுருல் இஸ்ஸாவைத் தாக்கவும் பல இளைஞர்கள் முயற்சி செய்தனர். அவர்களைத் தவிர்க்கும் பொருட்டு போலீசார் அந்த பெல்டா நிலக் குடியேற்றத் திட்டத்தை விட்டு வெளியில் வரும் வரை உடன் வந்தனர்,” என்று நிக் நஸாமி இன்று மலேசியாகினியிடம் கூறினார்.

அம்னோவின் அப்துல் மானான் இஸ்மாயில் பிரதிநிதிக்கும் பாயா புசார் நாடாளுமன்றத் தொகுதியில் அந்தத் திட்டம் அமைந்துள்ளது.

இரவு 9 மணி முதல் 12 மணி வரை தாங்கள் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கோப்பிக் கடைக்கு அருகில் ஒரு குழு ஒலிபெருக்கி சாதனங்களை வைத்ததாக அவர் சொன்னார்.

“நாங்கள் பேசுவதற்கு உள்ளூர் பிகேஆர் தலைவர்கள் போலீஸ் அனுமதியைப் பெற்றிருந்தனர். ஆனால் அந்த நிகழ்வு தொடங்குவதற்கு முன்னரே அதனை ரத்துச் செய்யுமாறு எங்களை எச்சரிக்கும் குறுஞ்செய்திகள் எங்களுக்கு அனுப்பப்பட்டன,” என்றார் நிக் நஸாமி.

“நான் 20 முதல் 30 நிமிடங்களுக்குப் பேசினேன். அப்போது அந்தக் குழுவினர் பாடல்களையும் இசையையும் ஒலிபெருக்கிகள் மூலம் அலறச் செய்தனர். கூட்டத்தினருடைய கவனத்தைத் திசை திருப்புவதே அவர்களுடைய நோக்கம்.”

“நாங்கள் முதலில் அது இசை நிகழ்ச்சி என எண்ணினோம். அவர்கள் காராவோக்கே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது என பின்னர் தெரிய வந்தது,” என அவர் குறிப்பிட்டார்.

“நுருல் இஸ்ஸா பேசத் தொடங்கியதும் சூழ்நிலை கட்டுமீறிப் போய் விட்டது. செராமா நடக்கும் இடத்துக்குள் அத்துமீறி நுழைய பலர் முயன்றனர். அவர்கள் நுருல் இஸ்ஸாவை வார்த்தைகளால் திட்டத் தொடங்கினர்.”

“நிலைமை அமைதியாகும் பொருட்டு நாங்கள் நுருலை கோப்பிக் கடைக்குள் கொண்டு சென்றோம். ஆனால் நிலைமை கட்டுமீறிப் போய் விட்டது. அதனால் நாங்கள் அந்த இடத்திலிருந்து வெளியேறினோம்,” என்றும் நிக் நஸாமி கூறினார்

பிகேஆர் தலைவர்கள் இருவருக்கும் பாதுகாப்பு வழங்கிய போலீசாரையும் அந்தக் கும்பல் ஆபாச வார்த்தைகளால் திட்டியது என்றும் அவர் சொன்னார்.

“நாங்கள் புறப்படும் போது கூட அந்தக் கும்பல் உறுப்பினர்கள் உள்ளே நுழைய முயன்றனர்.. பின்னர் போலீசார் எங்களுடன் துணைக்கு வந்தனர்.”

கடந்த வாரம் ஜோகூர் செம்புரோங்கில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்ட செராமாவை அம்னோ ஆதரவாளர்கள் சீர்குலைக்க முயன்றனர். அவர்கள் கற்களையும் கம்புகளையும் எறிந்ததுடன் பட்டாசுகளையும் வெடித்தனர். அவர்கள் உதைத்ததால் அன்வாருடைய காருக்கு சேதம் ஏற்பட்டது.

நுருல் இஸ்ஸாவும் நிக் நஸாமியும் அந்த விவகாரம் மீது இன்று பிற்பகல் மூன்று மணிக்கு நிருபர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.