மங்கோலிய பெண் அல்தான்துயா கொல்லப்பட்ட இடத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் இருந்தார் என்று கூறப்படுவதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. மூன்றாண்டுகளுக்குமுன் அமெரிக்க அரசதந்திரி ஒருவர் வாஷிங்டனுக்கு அனுப்பிவைத்த இரகசிய ஆவணம் ஒன்று இவ்வாறு குறிப்பிட்டிருந்தது.
அந்த ஆவணம், 2006 அக்டோபரில் அந்த மங்கோலிய பெண் கொல்லப்பட்டபோது அந்த இடத்தில் ரோஸ்மா இருந்தார் என்று சர்ச்சைக்குரிய வலைப்பதிவர் சத்திய பிரமாணம் செய்த இரண்டு வாரங்களுக்குப் பின்னர் கோலாலம்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தால் அனுப்பப்பட்டது.
அது “சாத்தியமில்லை என்று தெரிந்தாலும்கூட அல்தான்துயா கொலை விசாரணையின்மீது நம்பிக்கை இழந்துள்ள மலேசிய பொதுமக்களிடையே அது எடுபடலாம்”,என்று அந்த ஆவணம் குறிப்பிட்டது.
அச்செய்தி பொதுமக்களின் கவனத்தில் தொடர்ந்து இருந்துவந்தால் அப்துல்லா அஹமட் படாவிக்குப்பின் பிரதமராகும், அப்போது துணைப் பிரதமராக இருந்த நஜிப்பின் வாய்ப்பைக் கெடுத்துவிடும் என்றும் அது கூறியது.
ஜூன் 18-இல் ஒரு சத்திய பிரமாணம் செய்திருந்த ராஜா பெட்ரா, கொலை நடந்த இடத்தில் ரோஸ்மா அவரின் உதவியாளர் நோர்யாத்தி ஹசானுடனும் நோர்யாத்தியின் கணவர் இடைக்கால கர்னல் அசீஸ் பூயோங்குடனும் இருந்தார் என்று “நம்பத்தக்க தகவல்” தமக்குக் கிடைத்திருப்பதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.
2008 செப்டம்பர் 16-இல் அரசாங்கம் கைமாறலாம் என்ற வதந்தி பரவி அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த வேளையில் இச்சத்திய பிரமாணம் வெளிவந்து மிகுந்த பரபரப்பை உண்டுபண்ணியது.
ராஜா பெட்ராவின் சத்திய பிரமாணம் வெளிவந்த இரண்டு வாரங்கள் கழித்து அன்வார் இப்ராகிம் தன்னைக் குதப்புணர்ச்சிக்கு ஆளாக்கியதாக அவரின் முன்னாள் உதவியாளர் முகம்மட் சைபுல் புகாரி அஸ்லான் போலீசில் புகார் செய்தார்.
அன்வார் இப்ராகிம் அப்போதுதான் பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் வென்று நாடாளுமன்றம் சென்றிருந்தார்.
ஆனால், அவர் கூறியதுபோல் செப்டம்பர் 16-இல் புத்ரா ஜெயாவில் ஆட்சிமாற்றம் ஏற்படவில்லை. பிஎன்னிலிருந்து ஒரு எம்பிகூட கட்சிமாறவில்லை.
சத்திய பிரமாணம் செய்ததன்வழி ராஜா பெட்ரா, “தம்மை அபாயத்தில் சிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்” என்று பார்வையாளர்கள் கருதினாலும் “அவரிடம் ஏதேனும் ஆதாரம் இருக்கலாம் இல்லையென்றால் இப்படித் துணிந்திருக்க மாட்டார்” என்றும் அனுமானிக்கிறார்கள் என்று அந்த ஆவணம் குறிப்பிட்டது.
“அது பொய்யாக இருந்தால் ராஜா பெட்ராவும் அவரது குடும்பமும் அதற்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும்”, என்று ஒரு எம்பி கூறினார் என்றும் அந்த இரகசிய ஆவணம் கூறிற்று.
ரோஸ்மா, நோர்யாத்தி, அப்துல் அசீஸ் ஆகியோருக்கு எதிராக அவதூறு கூறியதாக 2008, ஜூலை 17-இல் ராஜா பெட்ராமீது வழக்கு தொடுக்கப்பட்டது.
ஆனால், ராஜா பெட்ரா மனைவி மரினாவுடன் நாட்டைவிட்டுத் தப்பி ஓடினார். இப்போது பிரிட்டனில் வசிக்கிறார்.
போலீசாரால் அவரைக் கண்டுபிடித்து அவர்மீது கைது ஆணையைச் சார்வு செய்ய முடியாத காரணத்தால் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் அவர்மீதான வழக்கைத் தள்ளுபடி செய்தது. ஆனால், குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்படவில்லை.
பின்னர், ராஜா பெட்ராவும், தமக்கு ஒன்றும் தெரியாது என்றும் இராணுவச் சிறப்புப் பிரிவின் முன்னாள் துணைத் தலைவர் கர்னல் அஸ்மி சைனல் அபிடின் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் சத்திய பிரமாணம் செய்ததாகக் கூறிவிட்டார்.