இந்திய மாணவர்களுக்கான அறிவிப்புக்களை மஇகா வரவேற்கிறது

அரசாங்க மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் சேரும் இந்திய மாணவர்களுக்கான கோட்டா அதிகரிக்கப்படும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ளதை மஇகா இன்று வரவேற்றுள்ளது.

இந்திய சமூக நலனில் பாரிசான் நேசனல் அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது என்பதையும் புறக்கணிக்கவில்லை என்பதையும் அந்த அறிவிப்பு மெய்பிப்பதாக மஇகா இளைஞர் பிரிவுத்  தலைவர் டி மோகன் கூறியுள்ளார்.

“இந்திய சமூகம் அந்த அறிவிப்பை நிச்சயம் வரவேற்கும். காரணம் எஸ்பிஎம் முடித்த பின்னர் தங்கள் பிள்ளைகள் மேற்கல்வியைத் தொடருவது குறித்து பெற்றோர்கள் கவலைப்படுகின்றனர்,” என அவர் சொன்னார்.

“அந்த அறிவிப்பைத் தொடர்ந்து அந்தப் பிரச்னையைத் தீர்த்து விட முடியும். இந்திய மாணவர்கள் தங்கள் மேற்கல்வியைத் தொடருவதற்கு வாய்ப்பளிக்கும் சிறந்த நடவடிக்கை,” என அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

இந்த நாட்டில் உள்ள மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் தற்போது 559 ஆக இந்திய மாணவர் எண்ணிக்கை 2012/2013 கல்வி ஆண்டில் 1,500 ஆக அதிகரிக்கப்படும் என பிரதமர் நேற்று கிள்ளான் காப்பாரில் பொங்கல் விழாக் கொண்டாட்டங்களின் போது ஆற்றிய உரையில் நஜிப் அறிவித்தார்.

13வது பொதுத் தேர்தலுக்கு மஇகா இளைஞர் பிரிவு ஏற்பாடுகள் பற்றியும் மோகனிடம் வினவப்பட்டது.

அதற்கு அவர் தாங்கள் ஏற்கனவே பல வியூகங்களத் தயாரித்து விட்டதாக பதில் அளித்தார்.  “நாங்கள் களத்தில் இறங்கி சமூகத்தை (குறிப்பாக இந்திய சமூகத்தை) சந்திப்பதும் அவர்களுடைய பிரச்னைகளைத் தீர்க்க உதவுவதும் அவற்றுள் அடங்கும்,” என்றார் அவர்.

“சொற்பொழிவுகள் அல்லது சிறப்புக் கூட்டங்கள் ஏதுமில்லை. காரணம் வாக்காளர்களை அடிக்கடி சந்திக்கும் ஒரு தலைவரை வாக்காளர்கள் போற்றுவர் என நான் நம்புகிறேன்.”

மஇகா  மற்ற பல விஷயங்களுடன் உள்ளூர் மக்களுடன் தொடர்பு கொள்வதற்காக அண்மைய விரைவில் ஒவ்வொரு மாநிலத்திலும் நடவடிக்கை அறைகளை விரைவில் அமைக்கும் என்றும் மோகன் சொன்னார்.

பெர்னாமா