கருத்தாக்கம்:ZAID IBRAHIM
புக்கிட் அமான் வணிகக் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குனர் சைட் இஸ்மாயில் சைட் அசிசான் துணிச்சல்காரர்.ஏன்?
நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) இயக்குனர்கள்மீது நம்பிக்கை மோசடி குற்றம்சாட்ட பொதுமான சான்றுகள் இருப்பதாக தெளிவாகவும் திட்டவட்டமாகவும் கூறியிருப்பதற்காகத்தான் அவரைத் துணிச்சல்காரர் என்கிறேன்.
துணிச்சல்கார்ர்களை அதுவும் அவர்கள் அரசு ஊழியர்களாக இருந்தால் எனக்கு மிகவும் பிடிக்கும். அரசு ஊழியர்கள் துணிச்சலையும் நேர்மையையும் காட்டினால்தான் மக்கள் அரசிடம் நீதியையும் நியாயத்தையும் எதிர்பார்க்க முடியும்.
போலீசாக இருந்தாலும் சரி, மலேசிய ஊழல்தடுப்பு ஆணையமாக இருந்தாலும் சரி. அல்லது நாட்டின் வேறு எந்த அமலாக்கப் பிரிவாக இருந்தாலும் சரி,அவர்களிடம் எவ்வளவு ஆதாரங்கள் இருந்தாலும் ஒருவரை நீதிமன்றத்தில் நிறுத்திக் குற்றம் சாட்டும் அதிகாரம் அவர்களுக்குக் கிடையாது என்பது சைட் இஸ்மாயிலுக்குத் தெரியும்.
அந்த அதிகாரம் சட்டத்துறைத் தலைவருக்கு மட்டும்தான் உண்டு. அப்படி இருந்தும் குறிப்பிட்ட ஒருவரைக் குற்றம் சாட்ட போதுமான ஆதாரம் இருப்பதாகக் கூறத் துணிந்துள்ளார் சைட் இஸ்மாயில்.
இதைத்தான் துணிச்சலான செயல் என்பது. மற்றபடி என்எப்சி-யுடன் தொடர்புகொண்ட ஒரு குடும்பத்தார் கூறுவதுபோல் இது உள்நோக்கம் கொண்ட ஒருவரின் செயல் அல்ல.
நீண்டகாலம் வழக்குரைஞராகவும் அரசின் சேவையிலும் இருந்துள்ள நான், “குறிப்பிட்ட வழக்கை ஏஜி அலுவலகத்துக்கு அனுப்பினோம், எந்த நடவடிக்கையும் இல்லை” என்று அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன்.
ஏன் நடவடிக்கை இல்லை என்பதற்கு எவருக்கும் உண்மையான காரணம் தெரியாது. கேட்டால்-அரசமைப்பின்கீழ் ஒருவரைக் குற்றம் சாட்டுவதாக இல்லையா என்பதை முடிவுசெய்யும் உரிமை ஏஜிக்கு மட்டுமே உண்டு என்று மட்டுமே கூறுவார்கள்.
அதைப் பார்க்கையில் பல நேரங்களில் வழக்குத் தொடர போலீசார் பரிந்துரைத்தும் சட்டத்துறைத் தலைவர் வழக்குத் தொடர மறுத்திருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.
அரசுத்தரப்புபோல் வழக்கு தொடுக்கும் சேவைகள்
மற்ற காவன்வெல்த் நாடுகளிலிருந்து நமது நாட்டின் நடைமுறை முற்றிலும் மாறுபடுகிறது.அங்கு அரசுதரப்பு வழக்குரைஞர்களாக இல்லாமலேயே அரசுத் தரப்பில் வழக்காடும் சேவை வழங்கும் வழக்குரைஞர்கள் இருப்பார்கள்.அவர்கள் சட்டத்துறைத் தலைவருக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்லர்.
அவர்கள் சுயேச்சையாக செயல்படுபவர்கள்.பொது நலனுக்காக பாடுபடுபவர்கள் என்பதால் அவர்கள்மீது நம்பிக்கை வைத்து சுயேச்சையாக செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் போலீசுடன் சேர்ந்து பணியாற்றுவார்கள்.(உதாரணத்துக்கு) பிரிட்டனில், போலீசார் தங்களிடம் போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி விட்ட பிறகு, சட்டத்துறைத் தலைவர் அதில் வேறு விதமாக முடிவு செய்யக்கூடும் என்று சொல்ல எவரும் அந்நாட்டுப் பிரதமர்கூட துணிய மாட்டார்.
மறுபுறம் இங்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷரிசாட் அப்துல் ஜலில் குடும்பத்தார்மீது நடவடிக்கை எடுப்பதா இல்லையா என்பதை முடிவு செய்யும் “முழு அதிகாரம்” சட்டத்துறைத் தலைவருக்குத்தான் உண்டு; போலீசுக்கு இல்லை என்று கூறியுள்ளதைப் பார்க்கும்போது ஷாரிசாட் குடும்பத்தார்மீது வழக்கு தொடுக்கப்படுமா என்ற சந்தேகம்தான் எழுகிறது.
அரசியல் தலைவர்கள் அப்படிப் பேசும்போது வழக்கு தொடுக்கப்படுவதில்லை என்பதுதான் கடந்தகால வரலாறாகும்.
நஜிப் என்ன செய்திருக்க வேண்டும், ஒரு வலுவான அரசியல்வாதி சம்பந்தப்பட்ட வழக்கில் புலன்விசாரணை செய்த போலீசைப் பாராட்டியிருக்க வேண்டும்.ஆனால்,என்னவோ தெரியவில்லை, நஜிப் எப்போதும் தப்பானதையே செய்கிறார்.
சைட் இஸ்மாயில், நீங்கள் போலீஸ் படைத் தலைவர் ஆவீர்கள் என்று நான் நினைக்கவில்லை.ஆனால், ஒன்று. விசாரணை முடிவைப் பொதுவில் அறிவித்தீர்கள், பாருங்கள், அது ஒரு நல்ல முன்மாதிரி.
இதன்பிறகாவது, விசாரணை செய்யும் குழுக்கள் விசாரணை முடிவுகளை வெளியில் சொல்ல முன்வருவார்கள் என எதிர்பார்ப்போம்.
சைட் இஸ்மாயிலை எங்குப் பார்த்தாலும் அவர் கையைப் பிடித்துக் குலுக்கத் தயங்க மாட்டேன். என்னைப் போலவே ஆயிரக்கணக்கானோருக்கும் இதே எண்ணம் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள் என்றும் நம்புகிறேன்.
=======================================================================================
ZAID IBRAHIM:முன்னாள் சட்ட அமைச்சர், பார்டி கித்தா தலைவர்