பினாங்கில் நேற்று நிகழ்ந்த லினாஸ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட குழப்பத்தில் காயமடைந்த பத்திரிக்கையாளர் அந்த இடத்தில் இருந்த அம்னோ ஆதரவாளர்களை “தூண்டி விட்டதாக” அம்னோ வலைப்பதிவாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
காயமடைந்த குவோங் யிட் போ நிருபர் அண்ட்ரூ சியூ-வுக்கு தமது வலது கையில் எட்டு தையல் போடப்பட்டுள்ளது. அந்தச் சம்பவத்தை “எதிர்த்தரப்பு ஆதரவு ஊடகங்கள்” திசை திருப்பி விட்டதாக புக்கிட் குளுகோர் அம்னோ தொகுதி உதவித் தலைவர் நோவாண்ட்ரி ஹசான் பாஸ்ரி கூறிக் கொண்டார்.
“நீண்ட தலைமுடியைக் கொண்டிருந்த அந்த சீனர் பத்திரிக்கையாளராகப் போய் விட்டது.”
“அந்தச் சம்பவத்தின் போது கேமிரா அல்லது வீடியோ கேமிராவை வைத்திருந்த எந்தப் பத்திரிக்கையாளரும் காயமடையவில்லை,” என நோவாண்ட்ரி தமது வலைப்பதிவான Minda intelek Melayu (MiM)வில் எழுதியுள்ளார்.
“பத்திரிக்கையாளன் எனத் தம்மைக் கூறிக் கொண்ட அந்த மனிதர் ஏன் கேமிரா ஏதுமில்லாமல் லினாஸ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களைப் போன்று பச்சை நிற டி சட்டையை அணிந்திருக்க வேண்டும் ?” என அவர் வினவினார். அது எங்களுக்கு குழப்பமாக உள்ளது என்றார் அவர்.
கதிரியக்க கசிவு அபாயத்தைக் கொண்ட லினாஸ் அரிய மண் தொழில் கூடம் பாகாங் குவாந்தானில் அமைவதை ஆட்சேபிக்கும் வகையில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட Himpunan Hijau 2.0 (பசுமைப் பேரணி) பேரணிகளில் ஒரு பகுதி அந்தப் பினாங்குப் பேரணி ஆகும்.
அந்த அரிய மண் தொழில் கூடம் மூடப்பட வேண்டும் எனக் கோரி 15,000க்கும் மேற்பட்டவர்கள் குவாந்தானில் நேற்று ஆர்ப்பாடாம் செய்தனர். அந்த தொழில் கூடத்துக்கு தற்காலிக நடவடிக்கை அனுமதி வழங்கப்பட்டுள்லது. அது ஜுன் மாதம் இயங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பினாங்கில் நடத்தப்பட்ட லினாஸ் எதிர்ப்புப் பேரணியில் 500 பேர் கலந்து கொண்டனர். அவர்களை அம்னோ இளைஞர் பிரிவையும் பெர்க்காசாவையும் சார்ந்தவர்கள் எனக் கூறப்படும் 50 பேர் மிரட்டினர்.
அந்தக் கும்பல் லினாஸ் எதிர்ப்புக் குழுவை நோக்கி கூச்சலிட்டதுடன் முதலமைச்சர் லிம் குவான் எங்-கைப் பேச விடாமலும் தடுக்க முயன்றது.
சியூ-வையும் இன்னொரு குவோங் இட் போ நிருபரான லீ ஹொங் சானையும் அந்த கும்பல் மோட்டார் சைக்கிள் தலைக் கவசத்தால் தாக்கியது.
“லிம் குவான் எங்-கை பாதுகாக்கும் வகையில் செயல்பட்ட சியூ, பாடாங் கோத்தா லாமா திடலில் கூடியிருந்த மக்களையும் தூண்டி விட்டார்,” என நோவாண்ட்ரி சொன்னார்.
அந்தச் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் அங்கு இருந்த நோவாண்ட்ரி தம்மிடமும் வீடியோ ஒளிப்பதிவுகள் இருப்பதாகக் கூறிக் கொண்டார். இணையத்தில் வெகு வேகமாக பரவிய “அனுதாபத்தைப் பெறுவதற்கான வீடியோக்களிலிருந்து தமது ஒளிப்பதிவுகள் மாறுபட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
வலைப்பதிவு ஒன்றில் சேர்க்கப்பட்ட அந்த 1.32 நிமிட வீடியோவில் ஆடவர் கும்பல் ஒன்று சியூவை நெருங்கிக் கொண்டிருப்பதைக் காட்டியது. சியூ அவர்களை விரட்டுவதற்கும் முயற்சி செய்தார்.
ஆனால் அது சியூ அந்தக் கும்பலை உதைப்பதற்கு முயன்ற பின்னர் எடுக்கப்பட்டதாக நோவாண்ட்ரி கூறிக் கொண்டார்.
அவர் தமது வலைப்பதிவில் அந்த வீடியோவின் பல படங்களையும் வெளியிட்டுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பிளாஸ்டிக் நாற்காலி ஒன்று வீசப்படுவதையும் அது காட்டியது