அரசியல்கட்சிகளுக்கு நிதிவழங்குவதை முறைப்படுத்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்த புதிய முன்னெடுப்பு மாற்றரசுக் கட்சிகளுக்கு நிதிவழங்குவோருக்குக் கலக்கத்தை உண்டுபண்ணலாம் என ட்ரேன்ஸ்பேரன்சி இண்டர்நேசனல் மலேசியா(டிஐ-எம்) கூறுகிறது.
எனவே, இப்புதிய முன்னெடுப்புடன் அரசும் அரசியல்கட்சிகளுக்கு நிதி அளிக்கும் ஒரு நடைமுறையைத் தொடக்கி வைக்கலாம்.இதன்வழி ஆளும்கட்சியும் எதிர்த்தரப்பினரும் சமமான ஆடுகளத்தில் நின்று போட்டியிடுவதை உறுதிப்படுத்தலாம்.
“அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்போர் தங்கள் பெயர்களை வெளியிட விரும்பாதிருக்கலாம்.
“அப்படிப்பட்டோருக்கு இப்புதிய முன்னெடுப்பு மேலும் தயக்கத்தைக் கொடுக்கும். இரு தரப்பினருக்கும் நிதி அளிக்கலாம், தப்பில்லை என்கிற அரசியல் பக்குவம் இன்னும் நமக்கு வரவில்லை”, என்று டிஐ-எம் தலைவர் பால் லோ மலேசியாகினியிடம் நேற்றுத் தெரிவித்தார்.
அரசியல்கட்சிகளுக்கு அளிக்கப்படும் நிதி, கட்சியின் அதிகாரப்பூர்வ கணக்கில் வரவு வைக்கப்பட்டு ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்படுவது நல்லது என்று நஜிப் நேற்று முன்மொழிந்தார்.
அரசியல்கட்சிகளுக்கு அளிக்கப்படும் நிதியை முறைப்படுத்த வேண்டும் என்பதை நெடுகிலும் சொல்லிவந்துள்ள லோ, இந்த முன்னெடுப்பை வரவேற்றாலும் அரசாங்கமும் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதை வழக்கத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்றார்.
“ஒரு திட்டத்தின்கீழ் அரசாங்கம் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கலாம்.இது ஒன்றும் வழக்கத்துக்கு மாறானது அல்ல. தென் கொரியா போன்ற நாடுகள் அதைச் செய்கின்றன.முதிர்ச்சிபெற்ற பல ஜனநாயக நாடுகளில் அரசாங்கம் அரசியல்கட்சிகளுக்கு நிதிவழங்கும் வழக்கம் உள்ளது.இதனால்,வணிகத்துறையிலிருந்து அரசியல்கட்சிகளுக்கு வரும் பணம் குறைகிறது.
“அரசியலுடன் வணிகத்தைக் கலக்கும்போது அரசியலில் நேர்மையைக் கடைப்பிடிப்பது கடினமாகி விடுகிறது”,என்றவர் விளக்கினார்.
அரசியல்கட்சிகளுக்கான நிதி அளிப்பை முறைப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக, அரசியல்கட்சிகளின் பணிகளுக்கு அரசாங்கமே நிதியுதவி அளிக்க வேண்டும் என்ற பரிந்துரையை டிஐ-எம் ஏற்கனவே அரசிடம் முன்வைத்துள்ளது.
குறிப்பாக, வேட்பாளர்களுக்கு அரசே நிதி அளிப்பது அவர்கள் தங்கள் தேர்தல் செலவுகளுக்கு வணிகர்களை எதிர்பார்க்கும் நிலையைக் குறைக்கும் என்று லோ விவரித்தார்.
“வணிகர்களிடம் பணம் வாங்கினால், ஆட்சிக்கு வந்தபின் அதற்கு விலை கொடுக்க வேண்டியிருக்கும்”, என்றவர் எச்சரித்தார்.