மலேசிய ஊழல்-தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்துக்குக் கூடுதல் அதிகாரம் தேவை என்று பிரதமர் விடுத்துள்ள அறிக்கை அந்த ஆணையம் பயனற்றது என்பதையும் அது சுதந்திரமாக செயல்படவில்லை என்பதையும்தான் காண்பிக்கிறது என்று பிகேஆர் கூறுகிறது.
அத்துடன் எம்ஏசிசி, அரசியல்வாதிகளின் சொல்படிதான் நடக்கிறது என்றும் நிர்வாகத்தின் தலையீடு அதில் நிறைய உண்டு என்றும் மாற்றரசுக் கட்சியினரும் சமூக அமைப்புகளும் கூறிவருவது உண்மைதான் என்பதையும் அது நிரூபிக்கிறது என்று அதன் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் கூறினார்.
“அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மை கிடைத்தால் எம்ஏசிசி கூடுதல் சுதந்திரத்துடன் செயல்படும் வகையில் ஊழல்-எதிர்ப்பு சேவை ஆணையம்(ஏசிஎஸ்சி) அமைக்கப்படும் என்று (நஜிப் அப்துல் ரசாக்)கூறியுள்ளார்.
“அதன்வழி எம்ஏசிசி திறம்படவும் சுதந்திரமாகவும் செயல்படவில்லை என்பதைப் பிரதமரே ஒப்புக்கொண்டிருக்கிறார்.அது, எம்ஏசிசியில் அரசியல் தலையீடும் புத்ரா ஜெயா குறுக்கீடும் உண்டு என்று மாற்றரசுக் கட்சியினரும் சமூக அமைப்புகளும் கூறிவந்தது உண்மைதான் என்பதையும் உறுதிப்படுத்துகிறது”.
எம்ஏசிசி தோற்றுப்போனதற்கு பிஎன்-அரசாங்கம்தான் பொறுப்பு என்று சுரேந்திரன் குறிப்பிட்டார்.
“பிஎன், சுயேச்சையாக செயல்படும் பொது அமைப்புகளில் அரசியல் காரணங்களுக்காக தலையிடுவதை நிறுத்தாதவரை, ஏசிஎஸ்சி அமைக்கப்படுவதால் பயனில்லை.
“பிஎன் தன்னைச் சீர்படுத்திக்கொண்டு அரசமைப்பை மதிக்கவும் பொதுச் சேவைகளில் தலையிடாமலும் இருக்க வேண்டும்.அப்போதுதான் எம்ஏசிசி சுதந்திரமாகவும் சிறப்பாகவும் செயல்படும்”.
பிஎன் சட்ட ஆளுமையை மதிக்காதவரை பொதுச் சேவைகள் திறம்பட செயல்பட மாட்டா என்று சுரேந்திரன் கூறினார்.
நஜிப்பின் அறிவிப்பு, மக்களின் ஆதரவைப் பெறவும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியைத் திரும்பவும் கைப்பற்றவுமான ஒரு தந்திரம்.
“பக்காத்தான் ரக்யாட் ஆட்சிக்கு வந்தால் பொதுச் சேவைகளில் அரசியல் தலையீடு இருக்காது, சட்டங்கள் மதிக்கப்படும்”, என்றாரவர்.