சட்டவிரோத குடியேறிகள்மீது ஆர்சிஐ-யா? ஊடகங்கள் மிகைப்படுத்திக் கூறிவிட்டன

சாபாவில் சட்டவிரோத குடியேறிகள் பற்றி விசாரிக்க அரச ஆணையம்(ஆர்சிஐ)அமைக்கப்படும் என்று ஊடகங்களில் வந்த செய்தி மிகைப்படுத்திக் கூறப்பட்டது ஒன்று என்கிறார் தோட்டத் தொழில், மூலப்பொருள் அமைச்சர் பெர்னார்ட் டொம்போக்.

அவ்விவகாரம் தொடர்பில் பெர்னாமில் வெளிவந்த செய்திகள் பற்றிக் கருத்துரைக்குமாறு கேட்கப்பட்டதற்கு அவற்றில் “ ஊகங்கள்” நிறைந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

“அமைச்சரவை ஒரு முடிவு செய்துள்ளது என்றுதான் குறிப்பிட்டேன். நான் போட்டது பாதிக்கரண்டி சீனிதான்.அதில் மும்மடங்கு சீனியைச் சேர்த்து செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். இதைப் பிரதமரின் முடிவுக்கே விட்டு விடுவோம்”, என்றாரவர்.

இவ்விவகாரம் தொடர்பில் அண்மையில் அறிக்கை வெளியிட்ட பிரதமர்,  ஆர்சிஐ “இன்னும் பரிசீலனையில் உள்ளது” என்று கூறியிருப்பது தமக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை என்று உப்கோ தலைவருமான டொம்போக் தெரிவித்தார்.

அதன் தொடர்பில் அமைச்சரவை ஒரு முடிவுக்கு வந்திருப்பதாக அவர் சொன்னார்.ஆனால், அதை அவர் விவரிக்கவில்லை.

“அமைச்சரவை செய்துள்ள முடிவில் மனநிறைவு கொள்கிறேன்.அமைச்சரவையின் முடிவைப் பிரதமரே தக்க தருணத்தில் அறிவிப்பார்.இதற்குமேல் எதுவும் சொல்ல என்னால் இயலாது”, என்றார்.

நஜிப் சாபாவில் அது பற்றி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால்,  “செய்தியாளர்கள் அது பற்றிக் கேட்கவில்லை” என்று சாபாவின் முன்னாள் முதல்வருமான டொம்போக் கூறினார். 

இன்று கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங்கில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட டொம்போக்,அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.