ஞாயிற்றுக்கிழமை லினாஸ்-எதிர்ப்புப் பேரணியை ஏற்பாடு செய்திருந்த சுவாராமின் பினாங்கு கிளை, பொதுமக்களை வன்முறையிலிருந்து காக்கும் பொறுப்பைத் தட்டிக்கழித்த போலீசைக் கண்டித்துள்ளது.
அப்பேரணியில் குழப்பம் உண்டாக்க முயன்ற லினாஸ்-ஆதரவு தரப்பினர் “முரட்டுத்தனமாக நடந்து கொண்டதால்” செய்தியாளர்கள் இருவர் காயமடைந்தனர் என்று சுவாராம் ஒருங்கிணைப்பாளர் லீ ஹுஇ ஃபெய் கூறினார்.
லினாஸ்-ஆதரவுத் தரப்பில் அம்னோவையும் மலாய் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்பான பெர்காசாவையும் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருந்தததாகக் குறிப்பிட்ட அவர், அவர்களின் நடத்தையை போலீசார் உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அமைதிப் பேரணியைக் குலைக்க முயன்ற அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க சுவாராம் போலீசுக்கு ஏழுநாள் அவகாசம் அளித்தது.
பினாங்கு போலீஸ் தலைவர் ஆயுப் யாக்கூப், ஏற்பாட்டாளர்கள் “திமிர் பிடித்தவர்கள்”, என்றும் கடைசி நேரத்தில்தான் பேரணி பற்றி போலீசுக்குத் தெரியப்படுத்தினார்கள் என்றும் கூறியிருப்பது பற்றியும் லீ கருத்துரைத்தார்.
“குடிமக்களின் அபயக்குரலுக்குச் செவிசாய்க்காமல் இருந்ததற்குச் சப்பைக்கட்டு கட்டுகிறார்”, என்றவர் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
“கண்முன் ஒரு கொலை விழுந்தால்கூட, வெறுமனே பார்த்துக்கொண்டிருந்துவிட்டுக் கொலையுண்டவர் முன்கூட்டியே எங்களுக்குத் தெரியப்படுத்தவில்லை, அதனால்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் போலீஸின் நிலையான நடைமுறையா?”, என்றவர் வினவினார்.
போலீஸ் சிறப்புப் பிரிவினர் பேரணியைக் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள் என்பதால் தமக்கு அது பற்றித் தெரியாது என்று ஆயுப் (வலம்) கூறுவது பொருத்தமாக இல்லை என்றார்.
குவாந்தானில் லினாஸுக்கு எதிராக நடைபெற்ற ஹிம்புனான் ஜிஜாவ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து பினாங்கில் நடைபெற்ற பேரணியில் 500 பேர் கலந்துகொண்டனர்.அப்பேரணியைக் குலைப்பதற்கு லினாஸுக்கு ஆதரவு தெரிவிக்கும் 50 பேர் கொண்ட கும்பல் ஒன்று முயன்றது.
நேற்று, பினாங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் கலந்துகொண்ட பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் லிடியா ஒங், தாமும் அப்பேரணிக்குச் சென்றிருந்ததாகக் குறிப்பிட்டார். லினாஸ்-எதிர்ப்பாளர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த ஒரு கும்பல் பற்றி ஆயுப்புக்குத் தகவல் தெரிவித்ததாக அவர் சொன்னார்.
ஆயுப்,பேரணியைக் கண்காணிக்க போலீஸ் குழு ஒன்று அனுப்பப்பட்டிருக்கும் தகவலைக் குறுஞ் செய்தி வாயிலாக லிடியாவுக்குத் தெரிவித்தார்.
அக்கும்பலின் அடாவடித்தனத்தால் அவரது மெர்சிடிஸ் காரும் இலேசாக சேதமடைந்தது. காரைச் சேதப்படுத்திய கும்பல், “மாநில எக்ஸ்கோவிடம்தான் பணம் இருக்குமே.காரைப் பழுது பார்த்துக்கொள்ளுங்கள்” என்றும் கிண்டலாகக் கூறியதாம்.
குவோங் வா ஜிட் பாவ் அலுவலகத்தில் நடைபெற்ற அதே செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்ட பாஸ் ஆணையர் சாலே மான், அம்னோ இளைஞர்களின் நடத்தை கண்டு வெட்கப்படுவதாகக் கூறினார்.
“இது மலாய்க் கலாச்சாரம் அல்ல.(லிம்)குவான் எங் மாநிலத் தலைவர். நாம் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.அவருக்கு மரியாதை கொடுங்கள்”, என்று அந்த பெர்மாத்தாங் பாசிர் சட்டமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.
அக்கும்பலில் பாஸ் உறுப்பினர்களும் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
“அதை ஆராய்வோம். அது உண்மையென்றால் சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுப்போம்”, என்றார்.
அச்சுறுத்தும் நடவடிக்கைகள்
பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் செள கொன் இயோவ், அது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல என்றார். ஜோகூரில் அன்வார் இப்ராகிம் செராமாமீது நடந்த தாக்குதலையும் வேறு சில சம்பவங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இச்சம்பவங்கள், சிலர் பின்னணியில் இருந்துகொண்டு இப்படிப்பட்ட வன்முறைகளையும் அச்சுறுத்தல்களையும் தூண்டி விடுவதை உறுதிப்படுத்துகின்றன.அம்னோ வன்முறைகளையும் காட்டுமிராண்டித்தனமான செயல்களையும் ஆதரிக்கிறதா?”, என்றவர் வினவினார்.
“ஆளும் கட்சி அமைதிப் பேரணியில் வசைபாடுவதையும் செய்தியாளர்களை அடித்து நொறுக்குவதையும் வழக்கமாக வைத்துக்கொண்டிருக்கும்போது அதன் தலைவர் சீரமைக்கப்போவதாகக் கூறும் உறுதிமொழியை எப்படி நம்புவது?”.