மஇகா தயாரிக்கும் இந்தியர்களின் பொருளாதார செயல்திட்டம்

மலேசிய இந்தியர் பொருளாதாரச் செயல் திட்டத்தின்கீழ் 15 ஆண்டுகளில் 50,000 தொழில் முனைவர்களை உருவாக்குவதன்வழி இந்தியர்கள் தேசியப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் பங்குபெற உதவ முடியும் என மஇகா நம்புவதாக அதன் தலைவர் ஜி.பழனிவேல் கூறுகிறார்.

“இந்தியர்கள் பல துறைகளில் குறிப்பாக பொருளாதாரத் துறையில் பின்தங்கியுள்ளனர்.இதற்கு மற்றவர்களைக் குறை சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்”, என்றாரவர்.

இன்று கோலாலம்பூரில், மலேசிய இந்தியர் பொருளாதார மாநாட்டை(எம்ஐஇசி)த் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனிவேல்,பொருளாதார சீரமைப்புத் திட்டங்களின்வழி பயனடைந்திருப்பதால் இந்திய சமூகம் மீண்டும் பாரிசான் நேசனலை ஆதரிக்கத் தொடங்கியுள்ளது என்றார்.

50,000 தொழில்முனைவர்கள் உருவாக்கப்படுவதால், 200,000வேலை வாய்ப்புகள் உருவாகும்.

தொடக்கக் கட்டமாக, அடுத்த சில மாதங்களில் மஇகா, மலேசிய இந்திய வர்த்தக, தொழிற்சங்கக் கூட்டமைப்பு(மைக்கி)டன் சேர்ந்து பல மாநிலங்களிலும் மாநாடுகளுக்கும் மற்ற சேவைத் திட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யும். 

அந்த மாநாடுகளின்வழி பெரிய மாற்றங்களை எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

இந்திய தொழில்முனைவர்கள் நிலையைக் கண்டறிய நாடு முழுக்க எட்டு கருத்தரங்குகள் நடத்தி  தகவல்களும் தரவுகளும் திரட்டப்படும்.

“அவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய செயல்திட்டம் பின்னர், நஜிப்(பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்) மூலமாக அரசாங்கத்திடம் வழங்கப்படும்”, என்று பழனிவேல் தெரிவித்தார்.

-Bernama