பாஸ், முஸ்லிம்-அல்லாத ஒருவரை உயர்ப்பதவியில் நியமிப்பது பற்றி அலோசிப்பதை “நல்ல நடவடிக்கை” என்று வரவேற்ற முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங்கை அதன் தலைவராக்கலாம் என்றார்.
“துணைத் தலைவர் மட்டும்தானா? முஸ்லிம்-அல்லாத ஒருவரை தலைவராகவும் ஆக்கலாம்.லிம் கிட் சியாங்கை பாஸ் தலைவராக்கலாம்”, என்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் மகாதிர் குத்தலாகக் கூறினார்.
“முஸ்லிம்-அல்லாதாருடன் இணைந்து பணியாற்றுவதற்காக எங்களை காஃபிர் என்றார்கள்.இப்போது முஸ்லிம்-அல்லாத ஒருவரை கட்சித் தலைவராக்கப் பார்க்கிறார்கள்.நன்று.மிக நன்று”.
முஸ்லிம்-அல்லாத பக்காத்தான் தலைவர்கள் அரசியல் செராமாக்களில் திருக்குர்ஆன் வாசகங்களை மேற்கோள் காட்டுவதைத் தற்காத்துப் பேசும் பாஸுக்கு முஸ்லிம்-அல்லாத ஒருவரைத் தலைவராக ஏற்றுக்கொள்வதில் பிரச்னை ஏதுமிருக்கக் கூடாது என்றாரவர்.
“அவர்கள் முஸ்லிம்களாக இல்லாவிட்டாலும் இஸ்லாத்தைப்(படித்து) புரிந்து வைத்திருக்கிறார்கள்.அதனால்தான் பேச்சின்போது அல்-குர்ஆன் வாசகங்களை மேற்கோள் காட்ட முடிகிறது”.
பாஸ் முஸ்லிம்-அல்லாத ஒருவருக்கு உயர்ப்பதவி கொடுக்க விரும்புவதாக வந்துள்ள செய்திகள் பற்றிக் கருத்துரைத்தபோது மகாதிர் இவ்வாறு கூறினார்.
முன்னாள் பிரதிநிதிகளின் அமைப்பான முபாராக்கின் உச்சமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்ட மகாதிர் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
பண அரசியல் நிலவுவதாக முன்னாள் அமைச்சர் காடிர் ஷேக் பாட்சிர் கூறியிருப்பது பற்றி வினவியதற்கு, காடிர் கூறியுள்ளதை வைத்தே அவரைத் திருப்பி அடித்தார் மகாதிர்.
“அவரும் பண அரசியலைப் பயன்படுத்தி இருப்பார்.அதுதான் அவருக்குத் தெரிந்திருக்கிறது”, என்று வெடுக்கென்று பதிலளித்தார்.
என்றாலும் மலேசிய அரசியலில் கட்சிக்குள் பரப்புரை செய்வதில் பணம் பங்காற்றுவதை அவர் ஒப்புக்கொண்டார்.
“மாற்றரசுக்கட்சிகளிலும் ஆளும்கட்சியிலும் பணம் ஓரளவுக்குப் பயன்படுகிறது. வாக்குகள் வாங்குவதற்கு அல்ல, பரப்புரை செய்வதற்கு”, என்றவர் விளக்கினார்.
பண அரசியல் பற்றிக் குறிப்பிட்ட காடிர்மீது ஒழுங்குநடவடிக்கை எடுக்க வேண்டுமா என்று வினவியதற்கு காடிர் இன்னும் அம்னோ உறுப்பினர்தானா என்று சந்தேகம் கொள்வதாக மகாதிர் கூறினார்.
முடிவாக,“குற்றம் சொல்வது எளிது”, என்றார்.