சபா பெர்ணாம் அம்னோ எம்பி அப்துல் ரஹ்மான் பாக்ரி-யை மொத்தம் 80,000 ரிங்கிட் பெறும் பொய்க் கோரிக்கைகளை சமர்பித்த எட்டுக் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளி என ஷா அலாம் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரசு தரப்பு தொடுத்த வழக்கின் மீது சந்தேகத்தை ஏற்படுத்த பிரதிவாதித் தரப்புத் தவறி விட்டதாக கூறிய நீதிபதி அஸ்ஹானிஸ் தே அஸ்மான் தே அந்தத் தீர்ப்பை வழங்கினார்.
சுங்கை தாவார் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது 2008ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதிக்கும் பிப்ரவரி 4ம் தேதிக்கும் இடையில் தலா 10,000 ரிங்கிட் பெறுமானமுள்ள கோரிக்கைகளை சமர்பித்ததாக 47 வயதான அப்துல் ரஹ்மான் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
தமது தொகுதிக்கான ஒதுக்கீட்டிலிருந்து நடத்தப்படாத நிகழ்வுகளுக்காக எட்டு பொய் கோரிக்கைகளை சமர்பித்ததாக கூறப்படும் எட்டுக் குற்றச்சாட்டுக்களில் அவரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட போதிலும் அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற வேண்டியதில்லை. காரணம் அப்துல் ரஹ்மான் தமது பதவிக் காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு காலத்தை முடித்துக் கொண்டுள்ளார்.
அப்துல் ரஹ்மான் பொய்க் கோரிக்கைகளை சமர்பிப்பதற்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்ட அவரது உதவியாளர் முகமட் ருஸ்லில் புஸ்ரோ-வையும் குற்றவாளி எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1997ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள அந்தக் குற்றச்சாட்டுக்களின் மீது குற்றவாளி எனக் கண்டு பிடிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் சம்பந்தப்பட்ட வெகுமதிக்கு ஐந்து மடங்கு கூடுதலாகவும் அபராதம் விதிக்கப்படலாம்.
தண்டனை நாளை வழங்கப்படும்.