FGVH என்ற Felda Global Ventures Holdings-சை பங்குப் பட்டியலில் இடம் பெறச் செய்வது பற்றியும் பொது மக்களுக்கு அது பங்குகளை விற்கத் திட்டமிட்டுள்ளது பற்றியும் சர்ச்சை செய்துவரும் பங்குதாரர்கள் சரியான புள்ளிவிவரங்களைப் பெற வேண்டும் என பெல்டா தலைவர் ஈசாம் சாமாட் கூறியிருக்கிறார்.
அவர்கள் அவ்வாறு செய்தால் அந்த நடவடிக்கையை ஏற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருப்பதை அறிந்து கொள்ள முடியும் என்றார் அவர்.
FGVH-ஐ பங்குப் பட்டியலில் இடம் பெறச் செய்வது தொடர்பில் ஒருவர் சரியான கண்ணோட்டத்தைப் பெற வேண்டுமானால் அரசியல் நலன்களையும் பொருளாதார நலன்களையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும் எனவும் ஈசா சாமாட் சொன்னார்.
“அண்மைய காலமாக அரசியல் ரீதியாக திசை திருப்பப்பட்டதால் அந்த விவகாரம் மீது மக்கள் குழப்பமடைந்து விட்டனர்,” என்றார் அவர்.
“அதன் விளைவாக பொது மக்களுக்குப் பங்குகள் வெளியிடப்படுவதால் கிடைக்கக் கூடிய நன்மைகள் பற்றி எங்கள் குடியேற்றக்காரர்களுக்கு தெரிவிக்க நாங்கள் செய்த பல ஏற்பாடுகள் நிலை குலைந்து விட்டன.”
ஈசா சாமாட், இன்று பெல்டா அற நிறுவனத்துக்கும் பிரிட்டனைச் சேர்ந்த City and Guilds அமைப்புக்கும் இடையில் பெல்டா ஆங்கில மொழி மய்யத்தை மேம்படுத்துவதில் அணுக்கமாக ஒத்துழைப்பதற்கு வகை செய்யும் உடன்பாடு கையெழுத்தான சடங்கை பார்வையிட்ட பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
KPF என்ற Koperasi Permodalan Felda, பெல்டா ஹோல்டிங்ஸில் உள்ள தனது பங்குகளை FGVH-டம் மாற்றி விடுவதைத் தடுப்பதற்கு எட்டு குடியேற்றக்காரர்கள் நீதிமன்றத் தடையுத்தரவை பெற்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து FGVH-ஐ பட்டியலிடுவதின் மூலம் கிடைக்கும் நன்மைகளை குடியேற்றக்காரர்கள் நேரடியாகப் பெறும் வகையில் சிறப்பு அமைப்பு ஒன்றைத் தோற்றுவிப்பதாக பெல்டா யோசனை தெரிவித்துள்ளது.
FGVH-ஐ பங்குப் பட்டியலில் சேர்ப்பது பற்றி 2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அறிவித்த போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் குறிப்பிட்டுள்ளதாகவும் ஈசா சாமாட் சொன்னார்.
“அந்த நிறுவனத்தின் மதிப்பை உயர்த்தி நிதி திரட்டி அதனை உலகளாவிய நிறுவனமாக மாற்றுவது நஜிப்பின் நோக்கம்,” என்றார் அவர்.
“நாங்கள் உலகில் மிகப் பெரிய தோட்ட நிறுவனமாக மேம்பாடு காண விரும்புகிறோம். அது பெரிய முன்னேற்றமாகும்.”
பெல்டா மிக உயர்ந்த நிலைக்கு முன்னேற வேண்டிய நேரம் வந்து விட்டது. பங்குகளை வெளியிடுவது மிகவும் உறுதியான வியூகமாகும் என்றும் ஈசா குறிப்பிட்டார்.
பெர்னாமா