தி ஸ்டார் மீது நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் பெர்க்காசா அந்த ஏட்டைப் புறக்கணிக்கும்

இஸ்லாத்தை அவமானப்படுத்திய தி ஸ்டார் நாளேடு மீது உள்துறை அமைச்சு கடும் நடவடிக்கை எடுக்கா விட்டால் அந்த பத்திரிக்கையைப் புறக்கணிக்கும் இயக்கத்தை நடத்தப் போவதாக பெர்க்காசா இளைஞர் பிரிவு எச்சரித்துள்ளது.

“அமைச்சு கடும் நடவடிக்கை எடுக்கா விட்டால் நாங்கள் அந்த பத்திரிக்கையை புறக்கணிக்கும் பொருட்டு நாடு முழுவதும் விளக்கக் கூட்டங்களை நடத்துவோம்,” என வீரா பெர்க்காசா அமைப்பின் தலைவர் இர்வான் பாஹ்மி இட்ரிஸ் கூறினார்.

தி ஸ்டார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அல்லது அதன் அச்சு அனுமதி நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என வீரா பெர்க்காசா கேட்டுக் கொள்ளும் மகஜர் ஒன்றை உள்துறை அமைச்சின் நிர்வாகப் பிரிவின் முது நிலை பேராளரிடம் மகஜர் ஒன்றை புத்ராஜெயாவில் சமர்பித்த பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார்.

“இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்க, உள்துறை அமைச்சு தி ஸ்டார் ஏட்டின் அச்சு அனுமதியை நிறுத்தி வைக்க வேண்டும் அல்லது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என இர்வான் சொன்னார்.

அமெரிக்க பாடகியான எரிக்கா பாடு, அல்லாஹ்-வின் பெயரைப் பிரதிநிதிக்கும் அரபு எழுத்து ஒவியத்தை தமது உடம்பில் வரைந்திருந்த படத்தை அந்த நாளேடு வெளியிட்டிருந்ததை கண்டித்துள்ள பல அமைப்புக்களுடன் பெர்க்காசாவும் சேர்ந்து கொண்டுள்ளது.

“இந்த நாட்டில் பெரும்பான்மையாக வாழ்கின்ற மலாய்க்காரர்கள், முஸ்லிம்கள் ஆகியோரது உணர்வுகளை அந்த ஏடு மதிப்பதாகவே தெரியவில்லை.”

“அந்த ஏடு அந்தப் போக்கைத் தொடர்ந்தால் அது அந்தத் தொழிலில் இருக்கக் கூடாது. வீரா பெர்க்காசாவில் உள்ள நாங்கள் ஒர் இனவாத பத்திரிக்கையான  தி ஸ்டார் நாளேட்டுடன் இனிமேலும் ஒத்துப் போக மட்டோம்,” என இர்வான் அறுதியிட்டுக் கூறினார்.

அந்த ஏடு இத்தகைய தவறைச் செய்துள்ளது இரண்டாவது முறை எனக் குறிப்பிட்ட அவர், கடந்த ஆண்டு முஸ்லிம்களின் புனித மாதமான ரமதானின் போது வெளியிட்ட உணவுப் பொருட்களை மேம்படுத்தும் செய்திகளைக் கொண்ட பக்கங்களில் ஒன்றில் பன்றி இறைச்சி கலந்த உணவு ஒன்று குறித்தும் குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக் காட்டினார்.