அன்வார் சேவை மையத்தில் இறந்த கோழி “ஆத்திரமூட்டும் செயல்”

செபராங் ஜெயாவில் உள்ள அன்வார் இப்ராஹிம் சேவை மய்யத்துக்கு வெளியில் இன்று இறந்த கோழி ஒன்று தொங்கவிடப்பட்டிருந்ததைக் கண்டு பினாங்கு பிகேஆர் உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பினாங்கு பிகேஆர் இளைஞர் பிரிவு அந்த விவகாரம் மீது போலீசில்  புகார் செய்துள்ளது.

ஆத்திரமூட்டும் பொருட்டு சில தரப்புக்கள் அந்த அடையாள நடவடிக்கையை மேற்கொண்டிருக்கக் கூடிய சாத்தியம் பற்றி போலீசார் விசாரிக்க வேண்டும் என அந்தப் பிரிவு விரும்புகிறது.

அந்த சேவை மய்யத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவர் காலை மணி 10.40 வாக்கில் அந்த இறந்த கோழி பற்றி தமக்குத் தகவல் கொடுத்ததாக மாநில பிகேஆர் இளைஞர் தலைவர் அமிர் முகமட் கசாலி கூறினார்.

குறுஞ்செய்தி வழியாக அந்தச் செய்தி கிடைத்த போது தாம் செபராங் பிராய் நகராட்சி மன்றத்தில் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்ததாக அமிர் சொன்னார்.

அந்தச் செய்தி கிடைத்ததும் அவர் செபராங் ஜெயாவில் அமைந்துள்ள சேவை மய்யத்துக்கு  விரைந்து சென்றார்.

பக்காத்தான் ராக்யாட் மக்களுக்காக மேற்கொண்டுள்ள திட்டங்களை குறிப்பாக பெர்மாத்தாங் பாவ்-வில் இளைஞர் பிரிவு தொடங்கியுள்ள திட்டங்களை சீர்குலைக்கும் நோக்கத்துடன் “சில தரப்புக்கள் ஆத்திரமூட்டும் பொருட்டு” மேற்கொண்ட நடவடிக்கை அது என்றும் அமிர் வருணித்தார்.

பிகேஆர் ஆலோசகருமான அன்வார், பெர்மாத்தாங் பாவ் எம்பி-யும் ஆவார்.

“கட்சியின் இளைஞர் பிரிவு கொண்டுள்ள உறுதியைக் குறிப்பாக நெடுஞ்சாலை டோல் கட்டணங்களை ரத்துச் செய்வது மீதான விவாதங்களுக்கு ஏற்பாடு செய்யும் முயற்சிகளை பலவீனப்படுத்தும் நோக்கத்தை அந்த நடவடிக்கை கொண்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம்.”

“என்றாலும் சினத்தை மூட்டும் அந்த காரியத்தைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. நாங்கள் எங்கள் திட்டங்களைத் தொடருவோம். இன்றிரவு சுங்கை டுவாவில் ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்றும் அமிர் சொன்னார்.

அந்த நிகழ்வில் முதலமைச்சர் லிம் குவான் எங் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விவாதத்தில் பங்கு கொள்ள நோர் முகமட்டுக்கு அழைப்பு

டோல் கட்டணங்களை நீக்கும் விஷயம் மீது லிம்-உடன் விவாதம் நடத்த வருமாறு பிரதமர் துறை அமைச்சர் நோர் முகமட் யாக்கோப்-புக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

தாசெக் குளுகோர் எம்பி-யுமான நோர் முகமட், அந்த அழைப்புக்கு பதில் அளிக்கவில்லை.