எரிக்கா இசை நிகழ்ச்சி ரத்துச் செய்யப்படுவதற்கு அமைச்சரவை ஆதரவு

இன்றிரவு நடத்தப்படவிருந்த அமெரிக்கப் பாடகியான எரிக்கா பாடு-வின் இசை நிகழ்ச்சியைத் தடை செய்வதற்கு தகவல் பண்பாடு, தொடர்பு அமைச்சு எடுத்த நடவடிக்கைக்கு அமைச்சரவை ஆதரவளித்துள்ளது. இவ்வாறு அதன் அமைச்சர் டாக்டர் ராயிஸ் யாத்திம் கூறியிருக்கிறார்.

பாதுகாப்பு அம்சம், சமயம் இனம் ஆகியவற்றுக்கான மரியாதைக்கு முக்கியத்துவம் கொடுப்பது, மலேசியாவில் நிலவும் சமூக பண்பாட்டு சூழ்நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த இசை நிகழ்ச்சி ரத்துச் செய்யப்பட வேண்டும் எனக் கோரி தாம் அமைச்சரவையில் பரிந்துரை  செய்ததாக  அவர் சொன்னார்

“அந்த நிகழ்ச்சி மட்டும் நடைபெற்றிருந்தால் உலகின் மற்ற பகுதிகளில் நிகழ்ந்துள்ளதைப் போன்று சமய உணர்வுகள் காரணமாக தகராறுகள் மூளக் கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கும் என அரச மலேசியப் போலீஸ் படை கருதியது.”

“பாதுகாப்பு அம்சங்களுடன் சமயம், இனம், அரசாங்கம் ஆகியவற்றின் கௌரவமும் பரிசீலிக்கப்பட வேண்டும்,” என்றும் ராயிஸ் இன்று கோலாலம்பூரில் நிருபர்களிடம் கூறினார்.

அந்நிய கலைஞர்கள் நிகழ்ச்சிகள், திரை வெளியீடுகள் மீதான மத்திய அமலாக்க நிறுவனம் (புஸ்பால்) எரிக்கா இசை நிகழ்ச்சியை ரத்துச் செய்துள்ளதாக நேற்று ராயிஸ் அறிவித்தார்.’

அந்த நிகழ்ச்சி புஸ்பால் வழிகாட்டிகளை மீறியிருப்பதும் மலேசிய மக்களுடைய சமய, இன, பண்பாட்டு உணர்வுகள் சம்பந்தமாக அங்கீகரிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறியிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அது தடை செய்யப்படுவதாக அவர் சொன்னார்.

அந்தக் கலைஞர் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லை தமது உடம்பில் எழுதிக் கொண்டிருப்பதும் அவர் அதனை மறைக்காமால் இருப்பதும் இஸ்லாத்தை அவமானப்படுத்துவதாகும். இது கடுமையான விஷயமாகும் என்றும் ராயிஸ் குறிப்பிட்டார்.

பெர்னாமா