எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மீதும் சிவில் சமூகப் போராளிகள் மீதும் அம்னோ, பெர்க்காசாவுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் குண்டர்கள் மேற்கொள்கின்ற அரசியல் வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பெர்சே 2.0 அமைப்பு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கேட்டுக் கொண்டுள்ளது.
அத்தகைய அரசியல் வன்முறைகள் விதி விலக்குடன் தொடருமானால் மலேசியாவில் தூய்மையான தேர்தல்களுக்கு இடம் இல்லாமல் போய் விடும் என தேர்தல் சீர்திருத்தங்களுக்குப் போராடும் பெர்சே அமைப்பு கூறியது.
“தேர்தலுக்கு முன்னரே அரசியல் போராளிகள் மீது தாக்குதல் தொடருமானால் அடுத்த தேர்தல் வரும் போது எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பிரச்சாரம் செய்கின்றவர்களுடைய பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் ?” என அதன் நடவடிக்கைக் குழு வெளியிட்ட அறிக்கை வினவியது.
அந்தக் குழுவுக்கு முன்னாள் வழக்குரைஞர் மன்றத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனும் தேசிய இலக்கியவாதியான ஏ சாமாட் சையட்டும் கூட்டாகத் தலைமை தாங்குகின்றனர். பிப்ரவரி 26ம் தேதி நிகழ்ந்த இரண்டு அரசியல் வன்முறை சம்பவங்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு அதற்குப் பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும் என அந்தக் குழு கோரியது.
அந்த தினத்தன்று அம்னோ இளைஞர் பிரிவையும் பெர்க்காசாவையும் சேர்ந்தவர்கள் என அடையாளம் கூறப்பட்ட குண்டர் கும்பல் ஒன்று பினாங்கில் நடைபெற்ற லினாஸ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கியது. அதில் இரண்டு நிருபர்கள் காயமடைந்தனர்.
“அதனைப் பார்த்துக் கொண்டிருந்த போலீஸ்காரர்கள் ஏதும் செய்யாமல் இருந்தது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அந்த நிகழ்வு பற்றி ஏற்பாட்டாளர்கள் முன்கூட்டியே போலீஸுக்குத் தகவல் கொடுக்கவில்லை என பினாங்கு போலீஸ் படைத் தலைவர் அயூப் யாக்கோப் குற்றம் சாட்டினார்,” என பெர்சே குறிப்பிட்டது.
அதே நாளன்று பாகாங் கம்பாங்கில் உள்ள Felda Lepar Hilir 1ல் அம்னோவைச் சேர்ந்த லெப்பார் சட்டமன்ற உறுப்பினர் முகமட் சுஹாய்மி ஜுசோவின் உதவியாளரான அஸ்ருல்லா அபெண்டி அப்துல்லா பிகேஆர் கட்சியின் லெம்பா பந்தாய் எம்பி நுருஸ் இஸ்ஸா அன்வாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
அவ்விரு சம்பவங்களும் தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல. அபு என்ற அம்னோவைத் தவிர வேறு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்னும் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்வுகளும் மாணவர் போராளிகள் நிகழ்வுகளும் இது போன்ற தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளன என்றும் பெர்சே அறிக்கை குறிப்பிட்டது.
ஆனால் அந்த இரு சம்பவங்களிலும் தங்கள் உறுப்பினர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுவதை அம்னோவும் பெர்க்காசாவும் மறுத்துள்ளன.
அத்தகைய அரசியல் வன்முறைகளுக்கு முடிவு கட்ட நஜிப் மறுத்தால் மலேசியா அரசியல் வன்முறைகளின் விளைவாக குழப்பத்தின் விளிம்புக்கு சென்று விடும் என்றும் பெர்சே எச்சரித்தது.
“அதனைக் கருத்தில் கொண்டு அந்த மருட்டலை தடுப்பதற்கு தேர்தல் பார்வையாளர் குழு ஒன்றை அமைக்குமாறு மலேசியர்களையும் அனைத்துலக சமூகத்தையும் பெர்சே 2.0 கேட்டுக் கொள்கிறது,” என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.