முஸ்லிம்களை கிறிஸ்துவர்கள் மதம் மாற்றுவதாகத் தாம் கூறிக் கொள்வதற்கு முன்னாள் சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ஹசான் அலி ஆதாரங்களைக் காட்ட வேண்டும் என MCCBCHST என்ற மலேசிய பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய, தாவோ ஆலோசனை மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
“முஸ்லிம்களை மதம் மாற்றம் செய்கின்றவர்கள் மீது குற்றம் சாட்டுவதற்கு போதுமான கிரிமினல் சட்டங்கள் உள்ளன. டாக்டர் ஹசான் போலீசில் புகார் செய்து ஆதாரங்களைக் கொடுத்திருக்க வேண்டும்,” என அந்த அரசு சாரா அமைப்பு ஒர் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
முஸ்லிம்களை கிறிஸ்துவ மத போதகர்கள் மதம் மாற்ற முயலுவதாக ஹசான் பல முறை குற்றம் சாட்டியுள்ளது குறித்து தாம் மிகவும் கவலைப்படுவதாகக் குறிப்பிட்ட அந்த அமைப்பு இதுநாள் வரை தமது கூற்றுக்கு ஆதாரத்தை அவர் வழங்கவில்லை எனக் கூறியது.
அந்த முன்னால் பாஸ் தலைவருடைய அறிக்கைகள் “வெறும் கற்பனைகள், ஜோடிக்கப்பட்டவை” என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்றும் அது வருணித்தது.
அரசியல்வாதி என்னும் முறையில் கிறிஸ்துவர்களுக்கு எதிராக அவர் அடிக்கடி அதனைக் கூறி வருவது மறைமுகமான நோக்கம் எதனையும் அவர் கொண்டிருக்கலாம் என்று தான் ஐயம் கொள்வதாகவும் MCCBCHST குறிப்பிட்டது.
“இல்லை என்றால் அவர் அந்த விவகாரத்தை விசாரிப்பதற்கு இன்னேரம் போலீசில் புகார் செய்திருப்பார். குற்றம் புரிந்த தரப்பு ஏதும் இருந்தால் தண்டனையும் வாங்கிக் கொடுத்திருப்பார்.”
“முஸ்லிம்களை மதம் மாற்றம் செய்வதற்காக முஸ்லிம்களுடன் தொழுகை நடத்துவதற்காக முஸ்லிம் அங்கிகளை அணிந்து கொண்டு பள்ளிவாசல்களுக்குள் செல்வதாக அவர் அண்மைய காலமாகக் குற்றம் சாட்டுகிறார்.”
“ஆதாரம் ஏதுமில்லாமல் முஸ்லிம்களை மதம் மாற்றுவதற்கு பள்ளிவாசல்களுக்குள் மக்கள் செல்வதை நம்ப முடியாமல் இருக்கிறது. அதே வேளையில் அவர்களை முஸ்லிம் சமயத்துக்கு மாற்றுவதற்காக அவர்கள் அங்கு கொண்டு செல்லப்படுவதாகக் கூட வாதாடலாம்,” என அந்த அமைப்பு குறிப்பிட்டது.
அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை
ஹசான் மதம் மாறிய அந்த 51 முஸ்லிம்களை அடையாளம் காட்ட வேண்டும் என்றும் அவர்கள் ஜோடிக்கப்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுக்களை பொய் எனக் காட்டுவதற்கு அவர்களை வெளிப்படையாக பொது மக்களுக்கு காட்ட வேண்டும் என்றும் MCCBCHST சவால் விடுத்தது.
ஹசான் விடுக்கும் அறிக்கைகள் கிறிஸ்துவர்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டி விடும் என்பதால் அரசாங்கம் அவரைக் கட்டுப்படுத்தி தேச நிந்தனைக் குற்றச்சாட்டின் பேரில் அவரை விசாரிக்க வேண்டும் என்றூம் அது வலியுறுத்தியது.
அரசாங்கம் அத்தகைய நடவடிக்கையை எடுக்காமல் இருப்பது அரசாங்கமும் அதற்கு உடந்தையாக இருக்கலாமோ என்ற எண்ணத்தை மக்கள் மனதில் உருவாக்கி விடக் கூடும் என்றும் அது அஞ்சுகிறது.
“நமது தலைவர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மிதவாதம் குறித்து பேசி வருகின்றனர். என்றாலும் உணர்வுகளைத் தூண்டும் கருத்துக்களை வெளியிடும் டாக்டர் ஹசான் போன்றவர்கள் கட்டுப்படுத்தப்படவில்லை,” என MCCBCHST குறிப்பிட்டது.