பாஸ் கட்சி அதன் நோக்கத்திலிருந்து திசை மாறி விட்டது என்கிறார் ஹசான் அலி

இஸ்லாமிய நாட்டை நிலை நிறுத்தவும் ஹுடுட் சட்டங்களுக்கு வலுவூட்டவும் தான் நடத்தும் போராட்டத்திலிருந்து பாஸ் கட்சி விலகி விட்டதாக முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர்  டாக்டர் ஹசான் அலி கூறுகிறார்.

அவ்வாறு அதை திசை மாறுவதற்கு அந்தக் கட்சியில் உள்ள புல்லுருவிகளே காரணம் என்று அவர் சொன்னார்.

“இஸ்லாமிய நாட்டை நிலை நிறுத்தவும் ஹுடுட் சட்டங்களுக்கு வலுவூட்டவும் போராடுவது என்ற தனது பொதுவான தத்துவத்திலிருந்து பாஸ் விலகி விட்டது. அந்த அத்தியாயத்தை மூடியது அந்தக் கட்சியில் உள்ள புல்லுருவிகளே இஸ்லாமிய அறிஞர்கள் அல்ல,” என அவர் நேற்றிரவு கோத்தாபாருவில் செராமா நிகழ்வு ஒன்றில் கூறினார்.

தற்போது அந்தக் கட்சியை அந்தப் புல்லுருவிகள் நடத்தி வருகின்றனர். சமய அறிஞர்களுடைய செல்வாக்கு தொடர்ந்து சரிந்து வருகிறது எனவும் பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹசான் குறிப்பிட்டார்.

“அவர்கள் என்னை வெளியேற்றி விட்டனர். அவர்கள் இப்போது கெடாவில் உள்ள உஸ்தாஜ் அஜிஸான் அப்துல் ரசாக்கை வெளியேற்ற விரும்புகின்றனர். அவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர்கள் ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அடுத்தடுத்துச் செல்வார்கள்,” என்றார் அவர்.

அந்த புல்லுருவிகளில் வெளிநாடுகளில் கலவி கற்றவர்களும் வெளிநாடுகளில் இருந்த போது மற்றவர்களை வீழ்த்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களும் அடங்குவர் என்றும் ஹசான்  சொன்னார்.

பாஸ் கட்சியில் நிகழ்வதை அதன் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் நன்கு அறிந்திருப்பர் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

பெர்னாமா