லிம் கிட் சியாங்: சுவா சொய் லெக்-கை அம்னோ தலைவராக்குங்கள்

பாஸ் கட்சி, லிம் கிட் சியாங்கை தனது தலைவராக நியமிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறிய கருத்துக்கு அந்த டிஏபி தலைவர் பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னாள் அம்னோ தலைவருமான டாக்டர் மகாதீர் மசீச தலைவர் சுவா சொய் லெக்-கை அம்னோ தலைவராக்க வேண்டும் என லிம் இன்று விடுத்த அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.

பாஸ் கட்சி தனது உயர் நிலைத் தலைமைத்துவத்திற்கு முஸ்லிம் அல்லாதவரை நியமிக்க பேரார்வம் கொண்டிருந்தால் லிம்-மை அந்தக் கட்சியின் தலைவராக நியமிக்கலாம் என மகாதீர் மிகவும் கிண்டலாகக் கூறியிருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் லிம் அறிக்கை அமைந்துள்ளது.

அந்த இஸ்லாமியக் கட்சி முஸ்லிம் அல்லாத ஒருவரை தனது துணைத் தலைவராக நியமிக்க தயாராக இருப்பதாக பாஸ் கோலா சிலாங்கூர் எம்பி சுல்கெப்லி அகமட் கூறியது பற்றி கருத்துரைத்த போது  மகாதீர் அவ்வாறு கூறினார்.

மகாதீர் 22 ஆண்டு காலம் பிரதமராக இருந்த போது ஏற்பட்டதாகக் கூறப்படும் 100 பில்லியன் ரிங்கிட் இழப்பு மீது முழுக் கணக்காய்வு நடத்தப்பட வேண்டும் என டிஏபி தலைவர் கேட்டுக் கொண்டதற்கு பதில் அளித்த மகாதீர், எல்லா துன்-களும் அவர்களுடைய புதல்வர்களும் பேரன்களும் விசாரிக்கப்பட வேண்டும் என அறிக்கை விடுத்தார். அது குறித்தும் லிம் கேள்வி எழுப்பினார்.

‘ஷாரிஸாட் போன்று நடந்து கொள்கிறார்’

எல்லா எல்லா துன்-களும் அவர்களுடைய புதல்வர்களும் பேரன்களும் விசாரிக்கப்பட்டால் தாம் பிரதமராக இருந்த காலத்தில் நிகழ்ந்த நிதி முறைகேடுகள் மூலம் ஏற்பட்ட 100 பில்லியன் ரிங்கிட் இழப்பை விசாரிக்கப்படுவதற்குத் தாம் தயாராக இருப்பதாக கூறும் போது மகாதீர் ஷாரிஸாட்டைப் போன்று நடந்து கொள்கிறாரா ?”

250 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்டுள்ள என்எப்சி என்னும் தேசிய விலங்குக் கூட ஊழல் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது “எந்த அம்னோ தலைவருக்குப் பிரச்னைகள் இல்லை  என்பதை என்னிடம் கூறுங்கள்,” என கூட்டரசு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் கூறிய அதே வார்த்தைகளுக்கு மகாதீர் மறு வடிவம் கொடுக்கிறாரா ?” என லிம் வினவினார்.

தங்களுடைய பெயர்களை தூய்மைப்படுத்திக் கொள்வதற்குக் கூட முழுமையாக விசாரிக்கப்படுவதற்கு மற்ற துன்-களும் அவர்களுடைய புதல்வர்களும் பேரன்களும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என அந்த முன்னாள் பிரதமர் உறுதியாக நம்புவதே அதற்கு காரணம் என்றார் லிம்.

மகாதீர் காலத்தை சேர்ந்த மற்ற துன் -கள், முன்னாள் பிரதமர் அப்துல்லா படாவி, முன்னாள் கூட்டரசு அமைச்சர்களான மூசா ஹித்தாம், டைம் ஜைனுடின், லிங் லியாங் சிக், லிம் கெங் எய்க் ஆகியோர் பேசத் தொடங்க வேண்டும் என்றும் லிம் கேட்டுக் கொண்டார்.

“22 ஆண்டு காலம்  மகாதீர் பிரதமராக இருந்த போது நிகழ்ந்த நிதி முறைகேடுகளினால் ஏற்பட்ட 100 பில்லியன் ரிங்கிட் இழப்பு குறித்து  முழுக் கணக்காய்வு நடத்தப்படுவதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றனரா ?”

முன்னாள் பிரதமர்களான அப்துல் ரசாக் ஹுசேன், ஹுசேன் ஒன் ஆகியோருடைய புதல்வர்களான முறையே பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனும் மற்றும் நடப்பு அமைச்சர்களும் விசாரிக்கப்படுவதற்குத் தாங்கள் தயாராக இருப்பது பற்றிக் கருத்துக் கூற வேண்டும் என்றும் லிம் கேட்டுக் கொண்டார்.

TAGS: