ஆஸ்திரேலிய, மலேசிய அகதிகள் பரிமாற்றத்திற்கு நீதிமன்றம் தடை

ஆஸ்திரேலியா மலேசியாவுடன் செய்துகொள்ளத் திட்டமிட்ட அகதிகள் பரிமாற்றத்துக்கு ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மலேசியாவுக்கு அனுப்பப்படுகின்ற அகதிகளின் மனித உரிமைகளுக்கு ஆஸ்திரேலியாவால் உத்தரவாதம் வழங்க முடியாது என்ற காரணத்தால் இத்திட்டத்துக்கு தடை விதிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய நீதிமன்றத்தின் இந்த முடிவு பெரும் ஏமாற்றம் தருவதாக இருக்கிறது என்றும், சட்டவிரோதக் குடியேற்றத்தை ஒடுக்க ஆஸ்திரேலியா எடுத்த முயற்சிகளுக்கு கிடைத்துள்ள பெரிய அடி இது என்றும் ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறியுள்ளது.

அகதிகள் பரிமாற்றம் தொடர்பில் கடந்த ஜூலை மாதம் ஆஸ்திரேலியா மலேசியாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தது.

தஞ்சம் கோரும் அகதிகள் என்று அங்கீகரிக்கப்பட்ட நிலையில் மலேசியாவில் உள்ள நான்காயிரம் பேருக்கு ஆஸ்திரேலியா தஞ்சம் வழங்கும், அதற்கு பிரதிபலனாக நிஜமாகவே அகதிதானா என்ற பரிசீலனை செய்யாமல் ஆஸ்திரேலியாவில் இருந்துவருகின்ற தஞ்சம் கோருவோர் எண்ணூறு பேரை பரிசீலனை செய்வதற்காக ஆஸ்திரேலியா மலேசியாவுக்கு அனுப்பும் என இந்த ஒப்பந்தம் அமைந்திருந்தது.

ஆஸ்திரேலிய நீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவை ஆஸ்திரேலிய தமிழர் பேரவை வரவேற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இருந்து தஞ்சம் கோருவோர் எண்ணூறு பேர் மலேசியா அனுப்பப்படுவார்கள் என்ற ஒப்பந்தம் தமக்கு கவலை அளிப்பதாகவே இருந்தது. அந்த நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது சிறப்பான ஒரு தீர்ப்பு ஆகும் என ஆஸ்திரேலிய தமிழர் பேரவையில் அகதிகள் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் பால விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

-BBC