அலோர் ஸ்டாரில் நாளை பாஸ் சிறப்புக் கூட்டம்

பாஸ் மத்திய செயலவை,கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக் (கீழே) குக்கும் துணை மந்திரி புசார் பஹ்ரொல்ரசி ஜவாவிக்குமிடையில் நிலவுவதாகக் கூறப்படும் கருத்துவேறுபாட்டைக் களையும் நோக்கில் நாளை அலோர் ஸ்டாரில் கூடும்.

கூட்டம் நடத்தும் முடிவு, நேற்றிரவு கோலாலம்பூரில் நடைபெற்ற பாஸ் மத்திய செயலவையின் மூன்று-மணி நேர அவசரக்கூட்டத்தில் செய்யப்பட்டதாக பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் ஆயுப் தெரிவித்தார்.

அக்கூட்டம் அலோர் ஸ்டாரில் இரவு மணி 9-க்கு நடைபெறும் என்றவர் கூறினார். ஆனால், கூட்டம் நடைபெறும் இடத்தைத் தெரிவிக்கவில்லை.

“இரு தரப்புகளுக்கும் கலந்துரையாட ஏற்பாடு செய்வோம்”, என்றாரவர். 

பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, வார இறுதிக்குள் சச்சரவுக்கு முடிவு கண்டுவிடலாம் என்று நம்புவதாகக் குறிப்பிட்டார்.

அனைத்து மத்திய செயலவை உறுப்பினர்களும் கட்சியின் மாநிலத் தலைவர்களும் அக்கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்றாரவர்.
 
பஹ்ரொல்ரசியுடன் சேர்ந்து செவ்வாய்க்கிழமை ஆட்சிக்குழு உறுப்பினராக பதவி உறுதிமொழி எடுக்க மறுத்த முங்குடு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இஸ்மாயில் சாலேயும் கூட்டத்துக்கு வருவார் என அவர் எதிர்பார்க்கிறார்.

TAGS: