ரம்லி அம்பலப்படுத்திய விசயங்கள் மீது நீதித் தீர்ப்பாயம் அமைக்கத் தயாரா? நஜிப்புக்கு லிம் சவால்

வணிகக் குற்றப் புலன்விசாரணைத் துறை முன்னாள் தலைவர் ரம்பி யூசுப், சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) அப்துல் கனி பட்டேய்லின் பழிவாங்கும் நடவடிக்கை பற்றிய தகவல்களை அம்பலப்படுத்தியதை அடுத்து நீதித் தீர்ப்பாயம் அமைத்து உண்மையைக் கண்டறிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தயாரா என்று டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் சவால் விடுத்துள்ளார்.

அதன் தொடர்பில் இன்று அறிக்கை விடுத்துள்ள லிம் “…கனி(வலம்) மீதான குற்றச்சாட்டுகள் தீர்க்கப்படும்வரை அவர் விடுப்பில் செல்ல வேண்டும். அவரது  இடத்துக்கு வேறு ஒருவர் ஏஜியாக நியமிக்கப்பட வேண்டும்”, என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரம்லி கூறிய குற்றச்சாட்டுகள் பற்றி பொதுமக்களிடையே சிறிதுகாலமாக பேசப்பட்டு வந்தாலும் ரம்லி இப்போதுதான் முதன்முறையாக வெளிப்படையாக அவற்றை அறிவித்துள்ளார் என்று அந்த டிஏபி தலைவர் கூறினார்.

“ நஜிப், அரசாங்கத்திலும் தேசிய அளவிலும் சீரமைப்புகள் செய்வதில் உண்மையில் அக்கறை கொண்டிருந்தால் இதில் உடனடிக் கவனம் செலுத்த வேண்டும்.”

கனியை,“நாட்டின் 55-ஆண்டுக்கால வரலாற்றில் அதிகமான, அதே வேளை கடுமையான அத்துமீறல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஏஜி” என்று ஈப்போ தீமோர் எம்பி வருணித்தார்.

நஜிப்பின் நிர்வாகம்,“கண்ணால் பார்ப்பதில்லை, காதால் கேட்பதில்லை, வாயால் பேசுவதில்லை என்றிருக்கும் மூன்று குரங்குகளின் நிலையில்” தொடர்ந்து இருக்காமல் அரசமைப்பு மற்றும் நாட்டின் உயர்ப்பதவியின் மேன்மையைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்.

நேற்று மலேசியாகினி, ரம்லி புதன்கிழமை தம் 60ஆம் பிறந்த நாளைக் கொண்டாடியபோது 2007-இல் கனி தம் மீதும் தம் ஆள்கள்மீதும் அபாண்ட பழிகளைச் சுமத்தினார் என்றும் ஆனால் நீதிமன்றங்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்துத் தங்களை விடுவித்ததாகவும் கூறினார் என அறிவித்திருந்தது.

அத்துடன் கனி, மலேசியா ஊழல்தடுப்பு ஆணையத்தைப் பயன்படுத்தித் தமக்கும் தம் ஆள்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க முயன்றதையும் அவர் விவரித்தார்.

கனிமீது இப்படிக் கடுமையாக குற்றம் சொல்லப்படுவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே, அன்வார் இப்ராகிமின் முதலாவது குதப்புணர்ச்சி வழக்கின்போதும் அவருக்குக் ‘கண்ணில் காயமேற்பட்ட’ சம்பவத்திலும் பொய்ச்சாட்சியங்களை உருவாக்கியதாக அவர்மீதும் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் மூசா ஹசன்மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.

TAGS: