பரவலாகும் அம்னோவின் “அத்துமீறல்களும் குண்டர்தனமும்”, பிகேஆர்

பிகேஆர், “வாயால் வசைபாடுதலையும் குண்டர்தனத்தையும் வன்முறைகளையும்”பரவலாக்கும் போக்கு அம்னோவில் காணப்படுகிறது என்று சாடியுள்ளது. இவ்வளவும் அரசாங்கமும் போலீசும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நிகழ்கிறது.

பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் இவ்வாறு கூறியுள்ளார். நடப்பில் சட்ட அமைச்சர் நஸ்ரி அசிஸ், இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமை ‘இப்லிஸ்’ என்று குறிப்பிட்டதையும், மாற்றரசுக் கட்சியினரின் செராமாக்களில் குழப்பம் விளைவிக்கப்பட்ட அண்மைய சம்பவங்களையும் சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு கூறினார்.

“நாகரிகமான ஜனநாயக நாட்டில்,  அரசியலில் வசைபாடுதல், குண்டர்தனம், வன்முறை போன்றவற்றுக்கு இடமில்லை.

“ஆனால், அண்மைய மாதங்களாக அம்னோ அந்த வழியில்தான் செல்கிறது. அம்னோ ஆதரவாளர்கள், மாற்றரசுக் கட்சியினரின் கூட்டங்களிலும் மற்ற நிகழ்வுகளிலும் கலகம் செய்து அவை நடக்காதபடி தடுத்திருக்கிறார்கள், பக்காத்தான் தலைவர்களை மிரட்டியிருக்கிறார்கள்”, என்று சுரேந்திரன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

“அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் அக்கறை காட்டாதிருக்கும்” அரசாங்கத்தையும் போலீசையும் அவர் சாடினார்.

‘பிஎன் தூண்டுதலால் பெருகிவரும் பாஸிச போக்கு’

கடந்த மாதம், ஜோகூர் செம்புரோங்கில் அன்வார் இப்ராகிமின் செராமா ஒன்றில் அம்னோ ஆதரவாளர்கள் கற்களையும் பட்டாசுகளையும் வீசி எறிந்து கலாட்டா செய்தார்கள்.

பகாங்கில் பெல்டா குடியேற்றப் பகுதி ஒன்றில் பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸாவும் தொடர்புப் பிரிவு இயக்குனர் நிக் நஸ்மி நிக் அஹ்மட்டும் கலந்துகொண்ட ஒரு செராமாவிலும் புகுந்து கலகம் செய்தனர் அவ்வட்டார அம்னோ தலைவர்கள்.

அண்மையில் பினாங்கில் லினாஸ்-எதிர்ப்புப் பேரணியையும் முரட்டுத்தனமாகக் கலைக்க முயன்றார்கள்.டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கிட்டத்தட்ட தாக்கப்படும் நிலைகூட உருவானது.

“அரசியலில் பிஎன் தூண்டுதலால் பரவி வரும் பாஸிச போக்கு” மலேசியர்களுக்குக் கவலையளிப்பதாக சுரேந்திரன் குறிப்பிட்டார்.மலேசியர்கள் “அறிவார்ந்த, நாகரிகமான வாதங்கள் நடப்பதையே விரும்புகிறார்கள், “வசைசொற்களையும் காலாடித்தனத்தையும்” அல்ல. 

“உண்மையான பேய் யார் என்பது மக்களுக்கு இப்போது புரிந்திருக்கும். அடக்குமுறை, ஊழல்,பொருளாதார நிர்வாகத்தில் சீர்கேடு, ஆணவம்-இவைதாம் அம்னோ-பிஎன் ஆட்சியின் அடையாள முத்திரைகள்”, என்றாரவர்.

TAGS: