இளைஞர், விளையாட்டு அமைச்சு அமைத்துள்ள 30 மில்லியன் ரிங்கிட் வியூகப் பிரிவு மீது முழு கணக்காய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என பாஸ் இன்று கோரியுள்ளது
அந்தப் பிரிவு பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹசான் அலி-க்காக 2,000 நிகழ்வுகளுக்கு நிதி உதவி செய்வதாகச் சொல்லப்படுகிறது.
அவ்வாறு கேட்டுக் கொண்ட பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார், அமைச்சின் இளைஞர் மேம்பாட்டுப் பிரிவின் கீழ் இயங்கும் அந்த வியூகப் பிரிவுக்கான பணம் அமைச்சின் மற்ற பிரிவுகளிலிருந்து திரட்டப்பட்டதாகத் தெரிவித்தார்.
அரசியல் நிகழ்வுகளுக்கு நிதியளிக்கும் பொருட்டு அமைச்சுக்குள் “ஒர் அம்னோ கிளையைப் போல” அந்தப் பிரிவு இயங்குகிறது என்றார் அவர்.
“இளைஞர்களைக் கவர்ந்து அவர்களை அம்னோவுக்கும் பிஎன் -னுக்கும் ஆதரவளிக்குமாறு செய்யும் ஹசான் நடவடிக்கைகளுக்கு அந்தப் பிரிவு நிதி உதவி செய்வதாக எனக்குத் தெரிய வந்துள்ளது.”
“அது ஹசானுடைய ஜாத்தி அமைப்பு (ஹசான் அமைத்துள்ள ஒர் அமைப்பு) அமைச்சுக்குள் இயங்குவதைப் போன்றதாகும்,” என்றார் மாஹ்புஸ்.
“எங்கள் ஆய்வுப்படி புதிய வாக்காளர்களில் 60 முதல் 70 விழுக்காட்டினர் பெரும்பாலும் இளைஞர்கள் அம்னோ/பிஎன் -னை ஆதரிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.”
“ஆளும் அரசாங்கத்தை ஆதரிக்கும் வகையில் இளைஞர்களை மாற்றும் பொறுப்பு அந்தப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.”
அந்த முழு ஒதுக்கீடு அல்லது அதில் குறைந்த பட்சம் 30 மில்லியன் ரிங்கிட் நாடு முழுவதும் ஹசான் நடத்தும் நிகழ்வுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த பாஸ் உதவித் தலைவர் கூறிக் கொண்டார்.
அதனைக் கருத்தில் கொண்டு இளைஞர், விளையாட்டு அமைச்சு வழிகாட்டியில் இடம் பெறாத அந்த பிரிவிடம் மக்கள் வரிப் பணத்தைப் பயன்படுத்தி அம்னோவுக்காக அந்த வேலையைச் செய்யும் பொறுப்பு ஏன் ஒப்படைக்கப்பட்டது என்பது மீது முழு கணக்காய்வு நடத்தப்பட வேண்டும் என மாஹ்புஸ் வலியுறுத்தினார்.