புதிய ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சரின் மனைவி பேராக்கை சேர்ந்தவர்

ஆஸ்திரேலியாவின் புதிய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பாப் கார்-ரின் துணைவியார் ஹெலெனா மலேசியாவில் பிறந்தவர். அவரது சொந்த ஊர் தைப்பிங் ஆகும்.

64 வயதான அந்தத் தம்பதியினர் 1972ம் ஆண்டு பிரஞ்சு பொலினிசியாவில் உள்ள தாஹித்தி என்னும் தீவில் விடுமுறைக்காக சென்றிருந்த போது சத்தித்துக் கொண்டனர்.

அதற்கு அடுத்த ஆண்டு அவர்கள் சிட்னியில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்திய-சீன கலப்பு இனப் பெற்றோர்களைக் கொண்ட அவர் 1965ம் ஆண்டு பாராமாட்டாவில் உள்ள Our Lady of Mercy கல்லூரியில் மேற்கல்வி பயிலுவதற்காக சிட்னிக்குச் சென்றார். பின்னர் அவர் சிட்னி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றார்.

ஆறு பிள்ளைகளில் இளையவரான ஹெலெனா வர்த்தகத் துறையில் ஈடுபட்டு வெற்றி அடைந்துள்ள பெண்மணி ஆவார். அவர் வர்த்தக ரீதியில் அச்சுக் கூடம் ஒன்றை நடத்தி வந்தார். 2004ம் ஆண்டு அதனை அவர் விற்று விட்டார்.

ஆஸ்திரேலிய அரங்கத்தில் முன்னணியில் இருக்கும் முன்னாள் மலேசியர்கள் பட்டியலில் இப்போது ஹெலெனாவும் சேர்ந்து கொண்டுள்ளார். ஏற்கனவே சபாவைச் சேர்ந்த பென்னி வோங் நிதி அமைச்சராக பணியாற்றி வருகிறார்.

முன்னாள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலப் பிரதமரான கார், வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்கும் பொருட்டு மேலவையில் சேருவார் என அமைச்சரவை மாற்றத்தை அறிவித்த பிரதமர் ஜுலியா கில்லார்ட் கூறினார்.

கடந்த மூன்று மாதங்களில் கில்லார்ட் இரண்டாவது முறையாக தமது அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளார்.

தலைமைத்துவப் போராட்டத்தில் தோல்வி கண்ட முன்னாள் வெளியுறவு அமைச்சர் கெவின் ரூட் பதவி துறந்ததைத் தொடர்ந்து அவரது இடத்துக்கு கார் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுச் சேவையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை தாம் மறுக்க இயலாது என கார் கூறியுள்ளார்.

“நீங்கள் அந்த நொடியைத் தேர்வு செய்வதில்லை. அந்த நொடி தான் உங்களை அடிக்கடி தேர்வு செய்கிறது,” என அவர் ஊடக சந்திப்பில் கூறினார்.

பெர்னாமா