எம்ஆர்டி, இடிப்பதில்லை என்னும் உடன்பட்டை ஆறு நில உரிமையாளர்களுடன் செய்து கொண்டது

எம்ஆர்டி கார்ப்பரேஷன், கோலாலம்பூர் ஜாலான் சுல்தான் நில உரிமையாளர்கள் ஏற்கனவே விடுத்த கோரிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்கு உத்தரவாதம் அளிக்கும் ஒப்பந்த அம்சங்களில் (POA) கையெழுத்திட்டுள்ளது.

பின்னர் கையெழுத்தாகும் இரு தரப்பு உடன்பாட்டில் இணைக்கப்படும் அம்சங்களை அந்த எம்ஆர்டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்ஹார் அப்துல் ஹமிட் நேற்று விடுத்த அறிக்கையில் வெளியிட்டார்:

இரு தரப்பு உடன்பாடு கையெழுத்தானதும் நிலத்தை கையகப்படுத்துவதை மீட்டுக் கொள்வது;

இப்போது உள்ள கட்டிடங்களை இடிப்பதில்லை என்பதற்கு உத்தரவாதம்;

சுரங்கப் பாதை அமைக்கப்படும் போது கூடின பட்சம் ஆறு மாதங்களுக்கு கட்டிடங்களின் குடியிருப்பாளர்களை இடம் மாற்றுவது;

சொத்துக்களின் கீழ் சுரங்கப் பாதைகளை அமைப்பதை அங்கீகரிக்கும் அறிக்கைகளுடன் கூடிய நிலப் உரிமைப் பத்திரங்கள்.

“கடந்த சில மாதங்களாக இரு தரப்புக்கும் வெற்றி அளிக்கும் நிலைமையை பேச்சுக்கள் மூலம் அடைவதற்கு பொறுமை காத்து எங்களுடன் ஒத்துழைத்த-  தங்கள் பெயரை வெளியிட விரும்பாத- நில உரிமையாளர்களை நான் பாராட்டுகிறேன்.”

“எம்ஆர்டி திட்டம் திட்டமிடப்பட்டபடி மேற்கொள்ளப்படுவதற்கு அந்த உடன்பாடு உதவியுள்ளது,” என்றும் அஸ்ஹார் கூறினார். சம்பந்தப்பட்ட ஆறு  நிலங்களில் குறைந்த கட்டண ஹோட்டலும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

வரலாற்றுப் புகழ் மிக்க சைனா டவுன் வழியாக செல்லும் எம்ஆர்டி திட்டத்தினால் மொத்தம் 21 நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.