அரசியல்வாதிகளிடையே, தப்பிப் பிறந்தவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார். அவர், கடந்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினரானார். இடச்சாரி கொள்கையுடையவர் என்பதால் மையநீரோட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு இவரைப் பிடிக்காது.
ஆனால், தன்னலமற்ற சேவையின் காரணமாக அரசியலில் இருதரப்பு அடிநிலை மக்களிடையேயும் இவருக்கு மதிப்புண்டு, மரியாதையுண்டு.
ஜெயக்குமாரின் மக்கள்சேவைக்கு மையமாக விளங்குவது புத்ரா ஜெயாவுக்கு வெகு தொலைவில் உள்ள சுங்கை சிப்புட். இங்குதான் இவர் கடந்த பொதுத் தேர்தலில் மஇகா தலைவர் ச.சாமிவேலுவைத் தோற்கடித்து நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தார்.
நாட்டுப்புறத்தில் மருத்துவம் செய்யும் இவர், நான்கு முழுநேரப் பணியாளர்களையும் எட்டு தன்னார்வலர்களையும் வைத்துக்கொண்டு வெளியில் தெரியாதபடி அடக்கமாக மக்கள் பணி செய்து அரசியல்-சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
ஜெயக்குமார், அரசியல் மையநீரோட்டத்துக்கு வெளியில் இருந்தாலும் அதைவிட்டு ஒதுங்கிப்போய்விடவில்லை. அதனுடன் இணைந்தே பணியாற்றி வருவதை இந்நேர்காணல் விவரிக்கிறது.
கடந்த ஆண்டு, ஜெயக்குமாரும் பிஎஸ்எம் (பார்டி சோசலிஸ் மலேசியா) உறுப்பினர் சிலரும், பெர்சே 2.0 பேரணி நடைபெறவிருந்த நேரத்தில் பேரரசருக்கு எதிராக போர்த் தொடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டனர்.
அதிலிருந்தே இந்த நேர்காணலைத் தொடங்குவோம்.
மலேசியாகினி: நீங்கள் கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டீர்கள். அந்த அனுபவத்தை விவரிக்க முடியுமா?
ஜெயக்குமார்: அது சுகமான அனுபவம் அல்ல. தனித்தனியே சிறை வைக்கப்பட்டோம். ஒன்றும் செய்ய முடியாதிருந்தது. படிப்பதற்குக்கூட எதுவும் கொடுக்க மறுத்தார்கள். பைபிளைக்கூட கொடுக்கவில்லை.மேலும் விரிவான அரசியல் அடக்குமுறைக்கும் பிஎஸ்எம்-முக்குத் தடைவிதிக்கவும் அது ஒரு தொடக்கமோ என்றுகூட கவலைப்பட்டேன்.
விசாரணை தொடங்கியபோது, போலீசாருக்கு உண்மையைத் தேடும் நோக்கம் இல்லை என்ற எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டது. ஏதாவது தகவல் கிடைக்குமா அதை வைத்து ஒரு கம்யூனிச-சதித் திட்டம் என்று கதைகட்ட முடியுமா என்பதிலேயே அவர்கள் குறியாக இருந்ததுபோல் தோன்றியது.
பெர்சே பேரணிக்குப் பின்னர் எங்களை விடுவித்திருக்கலாம். ஆள்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தபோது விடுவித்திருக்கலாம். அப்போது அதை அவர்கள் செய்யாமல் அப்படி இப்படி என்று இழுத்தடித்ததைப் பார்த்தபோது இரண்டு ஆண்டுகள் தீட்டி விடப்போகிறார்கள் என்றுதான் நினைத்தேன்.
அப்போது உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தேன். அதற்குமுன் குடும்பத்தாருக்காகக் காத்திருந்தேன். அவர்கள் மூலமாக என் உண்ணாநிலை போராட்டத்தை உலகுக்குத் தெரியப்படுத்த விரும்பினேன். அதற்காகக் காத்திருந்தேன், காத்திருந்தேன் 10நாள் காத்திருந்தேன். குடும்பத்தார் வருகைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
பேராக் அரசுடன் பிஎஸ்எம்-மின் தொடர்பு எப்படிப்பட்டது? நடப்பு அரசு சுங்கை சிப்புட்டின் உங்கள் பணிகளுக்கு உதவுகிறதா?
நிஜார் ஜமாலுடின் காலத்தில் பேராக் மாநில அரசுடன் நல்ல தொடர்பு இருந்தது. ஒதுக்கப்பட்ட தரப்பினருக்கும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்குமிடையில் சந்திப்புக் கூட்டங்களை ஏற்பாடு செய்வதெல்லாம் எளிதாக இருந்தது.
இப்போதைய அரசு எந்த உதவியும் வழங்குவதில்லை. கடந்த 18 மாதங்களில் மூன்று தடவை முயன்றேன், சுங்கை சிப்புட் நில அதிகாரியைச் சந்திக்கவே முடியவில்லை.
நிஜார் நிர்வாகம் போனதிலிருந்து மாதாந்திர மாவட்ட நடவடிக்கைக் குழுக் கூட்டங்களுக்கு மாற்றரசுக் கட்சி எம்பிகளோ சட்டமன்ற உறுப்பினர்களோ அழைக்கப்படுவதில்லை.
பிரச்னைகளை எதிர்நோக்கும் சமூகங்கள் உதவிகேட்டு மந்திரி புசார் அலுவலகம் சென்றால், பிஎஸ்எம்-முடன் தொடர்புகளை அறுத்துக்கொண்டால் மட்டுமே உதவ முடியும் என்று கூறுகிறார்கள்.
அதற்கு அவர்களின் எதிர்வினை எப்படி உள்ளது? அதன் விளைவாக உங்களுக்குக் கிடைத்துவந்த ஆதரவு குறைந்துபோனதா?
சிலர், அப்படிக் கூறிய பிஎன் ஆள்களை ஏசி இருக்கிறார்கள். சில நேரங்களில் ஆதரவு குறைகிறது.ஆனால், அவர்களின் குறைகளை பிஎன் தீர்க்கவில்லை என்றால் அவர்கள் மீண்டும் எங்களிடம்தான் வருகிறார்கள்.
அவர்கள் அங்கு உதவிகேட்டுச் செல்வதை நாங்களும் தடுப்பதில்லை. ஆனாலும்,அவர்களுடன் தொடர்புகளை வைத்துக்கொள்கிறோம்.
ஓராங் அஸ்லிகள் பயந்த சுபாவம் உள்ளவர்கள். அவர்களுக்கு பெர்ஜேயில் ஒரு பாலம் கட்டிக்கொடுத்தோம். இருந்தும் பேராக்கில் பக்காத்தான் அரசு கவிழ்ந்த பின்னர் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது கடினமாகவுள்ளது.
ஆனால், மொத்தத்தில் மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்களிடையே பிஎஸ்எம் பணிகளுக்கு ஆதரவு பெருகியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் பிஎன்-னின் தவறான நிர்வாகத்துக்கு எதிரான மறுப்பு மாற்றரசுக் கட்சிக்கு ஆதரவாக மாறுகிறது. சுங்கை சிப்புட்டில் அதனுடன் எங்களின் களப்பணியும் சேர்ந்து அந்த ஆதரவை எங்களுக்குப் பெற்றுத்தருகிறது.
பக்காத்தானுடன் பணியாற்றுவது எப்படி உள்ளது? அவர்களிடமிருந்து உங்களுக்கு என்ன உதவி கிடைக்கிறது?
உறவுகள் நல்ல நிலையில் உள்ளன. சுங்கை சிப்புட்டிலும் பேராக்கிலும் உள்ள பக்காத்தான் கட்சிகள் எங்கள் பணியில் திருப்தி கொள்கின்றனர் என்றுதான் நினைக்கிறேன்.
ஓராங் அஸ்லிகளுக்கு கம்போங் பெர்ஜேயில் நாங்கள் ஒரு பாலம் அமைத்துக் கொடுக்க பாஸ் மிகவும் உதவியது.
கம்போங் பெர்ஜே பாலம் பற்றிப் பலருக்குத் தெரியாது. அதை விவரிப்பீர்களா? அதற்கு பாஸ் எந்த வகையில் உதவியது?
கம்போங் பெர்ஜே ஓர் ஓராங் அஸ்லி கம்போங். சுங்கை சிப்புட்டிலிருந்து 40கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
அங்குள்ள 40 குடும்பங்கள் அவர்களின் கம்பத்துக்குச் செல்லும் தொங்கு பாலத்தைப் பழுதுபார்க்க விரும்பினார்கள். எங்களுக்கு அது சிரமமான பணியாக தோன்றியது. அதைவிட புதிய பாலம் கட்டுவது மேல் என்று நினைத்தோம். ஆனால், அது எவ்வளவு கடினமானது என்பது அப்போது தெரியவில்லை.
24-அடி உயரத்தில் நான்கு மரத்தூண்களை நிறுத்தி அதன்மேல் 150 அடி நீளத்துக்குப் பாலம் அமைக்க 18 மாதங்கள் ஆனது. ரிம80,000செலவானது. 20 தடவை கொத்தோங்-ரோயோங் முறையில் வேலை செய்து அதைக் கட்டி முடித்தோம்.
பாஸ் தலைவர் ஒருவர், அவர் ஒரு பொறியாளரும்கூட, பாலத்தை வடிவமைக்க உதவினார். அடிக்கடி வந்து தொழில்நுட்ப வேலைகளை மேற்பார்வை செய்வார்.
பாஸ் உறுப்பினர் பலரும் கொத்தோங்-ரோயோங் பணியில் கலந்துகொண்டு உதவினார்கள். பாஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் அவரது சிமெண்ட் கலவைக்கருவியைக் கொடுத்து உதவினார்.பேராக் பாஸ் அத்திட்டத்துக்கு உதவியாக ரிம5,000-ம் கொடுத்தது.
எங்களுக்கு அது ஒரு பெரும்பணிதான். ஆனாலும் கட்சி உறுப்பினர்கள், நண்பர்களின் உதவியுடன் அதைச் செய்து முடித்தோம்.
அதைச் செய்து முடித்தது சுங்கை சிப்புட்டில் பிஎஸ்எம் உறுப்பினர்களுக்கு பெரும் ஊக்கத்தைக் கொடுத்துள்ளது. அது, ஓராங் அஸ்லி மக்களுக்கு உதவும் எங்களின் கடப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அது பக்காத்தான் ரக்யாட் கட்சிகளின் அபிமானத்தையும் ஆதரவையும் பெற்றுத்தந்துள்ளது.