உடற்குறையுடையவருக்கான உதவியை நிறுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ஆத்திரத்தை மூட்டியுள்ளது

சரவாக் விவசாயத் துணை அமைச்சர் மொங் டாஹாங், எதிர்த்தரப்புக்கு ஆதரவளிக்கும் உடற்குறையுடையவருக்கு வழங்கப்படும் அரசாங்க உதவியை நிறுத்துமாறு ஆணையிடும் கடிதம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் இணைய மக்களிடயே ஆத்திரத்தை மூட்டியுள்ளது.

அந்தக் கடிதம் முகநூல் பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் மேல் பகுதியில் “விவசாயத் துணை அமைச்சர் (ஆய்வும் விற்பனையும்) என்ற வாசகம் காணப்படுகின்றது. அந்த கடிதத்தின் பொருள் தலைப்பு: “ஸ்ரீஅமான், எந்துவாலாங் எந்தாவாவைச் சேர்ந்த திரு பூருஸிஸ் லெபி-க்கான எல்லா அரசாங்க உதவிகளையும் நிறுத்துங்கள்” என்பதாகும்.

அந்தக் கடிதத்தில் உடற்குறையுடையவர் என அடையாளம் கூறப்பட்டுள்ள  பூருஸிஸுக்கு கொடுக்கப்படும் “எல்லா வகையான அரசாங்க உதவிகளையும்” உடனடியாக நிறுத்துமாறு ஸ்ரீஅமான் விவசாயத் துறை துணை இயக்குநருக்கு அந்தக் கடிதம் வேண்டுகோள் விடுத்தது.

“காரணம் அவர் அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராக நடந்து கொள்கிறார். 2011ம் ஆண்டு முடிந்த மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் அவர் எதிர்க்கட்சி வேட்பாளரை வெளிப்படையாகவே ஆதரித்தார்,” என அந்தக் கடிதம் மேலும் கூறியது.

“அத்துடன் அவர் எதிர்க்கட்சிக்காக நடவடிக்கை மய்யம் ஒன்றையும் அமைத்துள்ளார்.” அந்தக் கடிதத்தை கடந்த வெள்ளிக் கிழமையன்று இணையத்தில் சேர்த்த ஜானி பி கூட் என்பவர் முக நூலில் இவ்வாறு எழுதியிருக்கிறார்.

“திரு பூருஸிஸ் லெபி எதிர்த்தரப்பை வெளிப்படையாக ஆதரித்தார் என்பதற்காக அவருக்கு வழங்கப்படும் உடற்குறை உடையவர்களுக்கான அலவன்ஸை கூடிய விரைவில் நிறுத்துமாறு ஆளும் கட்சியைச் சேர்ந்த இள நிலை விவசாய அமைச்சர்  மொங் டாஹாங் ஆணை பிறப்பித்துள்ளது மனித நேயமற்றது. வெட்கமில்லாதது”

துணை அமைச்சர் கருத்துக் கூற மறுத்து விட்டார்

முக நூலில் அந்தக் கடிதத்தை 1,300க்கும் மேற்பட்டவர்கள் படித்து, பகிர்ந்து கொண்டுள்ளனர். அது குறித்து பல இணைய மக்கள் தங்கள் ஆத்திரத்தையும் கொட்டியுள்ளனர்.

“உடற்குறையுடைய ஒருவரை துணை அமைச்சர் அவ்வாறு நடத்துவது அவருக்கு அழகல்ல. அற நடவடிக்கைகளுடன் அரசியல் சம்பந்தப்படவே கூடாது,” என சன்னி இங் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

“அதோ கிறுக்குப் பிடித்த மனிதர்,” என சிமோன் ரிட்டிக்கோஸ் எழுதியுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதியிடப்பட்ட அந்தக் கடிதம் மொங்-கின் கையெழுத்து எனத் தோன்றும் கையெழுத்தும் காணப்படுகிறது.

புக்கீட் கெகுனான் சட்டமன்ற உறுப்பினருமான மொங்-குடன் மலெசியாகினி தொடர்பு கொண்ட போது அந்த விவகாரம் எந்தக் கருத்தும் கூற அவர் மறுத்து விட்டார்.

“நான் சரியான நேரத்தில் அறிக்கை வெளியிடுவேன்,” என்றார் அவர்.

அந்தக் கடிதம் தம்மிடமிருந்து அனுப்பப்பட்டதா இல்லையா என்பதை உறுதிப்படுத்தவோ நிராகரிக்கவோ மொங் மறுத்து விட்டார்

கடந்த ஆண்டு நிகழ்ந்த சரவாக் சட்டமன்றத் தேர்தலில் மொங்- பிகேஆர், எஸ்யூபிபி ஆகியவற்றின்   வேட்பாளர்களையும்  சுயேச்சை வேட்பாளரையும் தோற்கடித்து தமது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.