ஐந்தாம் படிவ பயிற்சி நூல் ஒன்றில் மலாய்க்காரர்களுடைய நிலையை பராமரிப்பது பற்றிய கேள்வி ஒன்று இடம் பெற்றுள்ளது இணைய மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தக் கேள்வி படம் பிடிக்கப்பட்டு பிப்ரவரி 26ம் தேது முகநூலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதனை கிட்டத்தட்ட 3,000 பேர் படித்துள்ளனர்.
ஐந்தாம் படிவ வரலாற்றுப் பாடத்துக்காக Oxford Fajar வெளியிட்டுள்ள ‘ Effective Practice ‘ புத்தகங்களின் ஒரு பகுதி அந்தப் பயிற்சி நூலாகும்.
சர்ச்சைக்குரிய அந்தக் கேள்வி 31வது பக்கத்தில் காணப்படுகிறது. அதன் வாசகம் “நீங்கள் ஒரு தலைவராக இருந்தால் மலாய்க்காரர்களுடைய நிலையை தற்காப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டிய இரண்டு நடவடிக்கைகளைக் குறிப்பிடுங்கள்” என்பதாகும்.
அந்தக் கேள்வியை முக நூலில் சேர்த்த இணைய குடிமகனான ஜாக் லிம் அந்தப் படத்துக்கு பின்வருமாறு குறிப்பு எழுதியுள்ளார்: “என் புதல்வியின் வரலாற்றுப் பயிற்சி நூலை நான் திறந்து பார்த்தேன். இது என் கண்களில் பட்டது. இந்த நாட்டில் என் குழந்தை படிப்பதற்காக நான் வருத்தமடைந்தேன்.”
அந்த முக நூல் பக்கத்தை நாடு முழுவதையும் சேர்ந்த பலர் படித்துள்ளதுடன் தங்கள் கருத்துக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
“அந்த முறைக்குள் மறைந்துள்ள இனவாத நபர்களுடைய வேலை அது,” என சின் இயூ மெங் முக நூலில் எழுதியுள்ளார். “இது உண்மையில் வெறுப்பைத் தருகிறது,” என வின்செண்ட் வோங் குறிப்பிட்டுள்ளார்.
அந்த விஷயம் தொடர்பில் கருத்துக் கேட்பதற்காக Oxford Fajarன் சமூக அறிவியல் பிரிவு ஆசிரியர் பகுதி நிர்வாகி நூராஜிஸானுடன் மலேசியாகினி தொடர்பு கொண்டது.
அந்தக் கேள்வி சம்பந்தப்பட்ட அத்தியாயத்தின் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டது என விளக்குவதற்கு அவர் பெரும் சிரமம் எடுத்துக் கொண்டார்.
“அந்தக் கேள்வி எழுதப்பட்ட போது அது “பிரிட்டிஷ்காரருக்கு எதிராக மலாய்க்காரர்கள்” என்னும் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டதாகும். “மற்ற இனங்களுக்கு எதிராக மலாய்க்காரர்களை அல்ல” என அவர் கூறினார்
“தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். அது அப்போதைய மலாயன் யூனியன் சம்பந்தப்பட்டதாகும். இப்போது உள்ள மலாய்க்காரர்கள் அல்ல,” என்றார் அவர்.
இடைநிலைப் பள்ளிக்கூடங்களுக்கு அரசாங்கம் நிர்ணயித்துள்ள பாடப் புத்தக்கத்தின் அடிப்படையில் எல்லாக் கேள்விகளும் தயாரிக்கப்படுவதாக நூராஜிஸான் சொன்னார். யாரையும் புண்படுத்துவது வெளியீட்டாளருடைய நோக்கமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்தக் கேள்விக்கான பதில் பக்கம் ஜே10ல் காணப்படுகிறது. அந்தப் பதில்: “குடியுரிமையை கடுமையாக்குவது, மலாய் நலன்களைப் பாதுகாக்குமாறு பிரிட்டிஷ்காரர்களுக்கு அழுத்தம் கொடுப்பது.”