கெடா தகராறு தீர்க்கப்பட்டு விட்டது என்கிறார் பாஸ் உதவித் தலைவர் ஒருவர்

கெடா மாநில அரசாங்கத்தில் சர்ச்சையில் ஈடுபட்டுள்ள தலைவர்களுக்கு இடையில் நிலவும் தகராற்றுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

பாஸ் தலைமைத்துவத்துக்கும் அந்தக் கட்சியின் கெடா தலைமைத்துவத்துக்கும் இடையில் நேற்றிரவு நிகழ்ந்த கூட்டத்தில் ஏகமனதாக அந்தத் தீர்வு காணப்பட்டது என பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் அயூப் சொன்னதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

விரைவில் பெரும்பாலும் இன்று அந்தத் தீர்வு வெளிப்படையாக அறிவிக்கப்படும் என்றும் கூறியது.

“முடிவு காணப்பட்டுள்ளது. அது ஏகமனதானது… அது விரைவில் அறிவிக்கப்படும். இப்போதைக்கு நான் அதனை மட்டுமே சொல்ல முடியும்,” என்றார் சலாஹுடின்.

கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக்கிற்கும் அவரது இரண்டு முன்னாள் ஆட்சி மன்ற உறுப்பினர்களான பாஹ்ரோல்ராஸி ஸாவாவி, இஸ்மாயில் சாலே ஆகியோருக்கும் இடையிலான தகராற்றைத் தீர்க்கும் நோக்கத்துடன் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் அந்தக் கூட்டம் நிகழ்ந்தது.

அஜிஸான் தலைமைத்துவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மீண்டும் ஆட்சி மன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்கு அவர்கள் இருவரும் மறுப்பு தெரிவித்த பின்னர் மாநில அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்தது.

நேற்றிரவு மந்திரி புசாருடைய இல்லத்தில் பத்து மணிக்குத் தொடங்கிய கூட்டத்தில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், துணைத் தலைவர் அப்துல் ஹாடி அவாங் உட்பட பல மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.