பேருந்து விபத்தில் இரு இந்திய சுற்றுப்பயணிகள் பலி,20பேர் காயம்

கோலாலம்பூருக்கு அருகில், கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் 22 இந்திய சுற்றுப்பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலா பேருந்து தடம்புரண்டதில் இருவர் உயிரிழந்தனர்,மேலும் 20பேர் காயமடைந்தனர்.

கெந்திங் மலையிலிருந்து வந்துகொண்டிருந்த அப்பேருந்து காலை மணி 8 வாக்கில் குறுகலான வளைவில் திரும்ப முனைந்தபோது கட்டுப்பாட்டை இழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

“சாலைத்தடுப்பில் மோதி அது தடம்புரண்டது”, என பெந்தோங் போலீஸ் பேச்சாளர் ஒருவர் பெர்னாமாவிடம் கூறினார்.

ஓர் ஆடவரும் பெண்ணும் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்தார்கள்.அவர்களின் அடையாளம் காண போலீஸ் முயற்சி செய்து வருவதாக அப்பேச்சாளர் கூறினார்.

அவர்களின் சடலங்களும் காயமடைந்த மற்றவர்களும் கோலாலம்பூர் பொது மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் விசாரணைக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பெந்தோங் தீ அணைப்பு, மீட்புத்துறை பேச்சாளர், பேருந்திலிருந்த காயமடைந்த பயணிகள் அனைவரையும் காலை 9.20க்குள் வெளியில் கொண்டுவந்துவிட்டதாகத் தெரிவித்தார்.மீட்புப் பணியில் பெந்தோங், செலயாங், கோலா குபு பாரு, கெந்திங் மலை, வங்சா மாஜூ தீ அணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 50பேர் கலந்துகொண்டனர்.

-பெர்னாமா