வருமானம் ஏதுமில்லாத நிலையிலும், தம் பிஆர்1எம் மனு நிராகரிக்கப்பட்டதை அறிந்து ஓர் ஓராங் அஸ்லி கொதிப்படைந்துள்ளார்.
ஹுலு லங்காட் கம்போங் ஓராங் அஸ்லி பூலாவ் கெம்பாவைச் சேர்ந்த தேவி மாலாம், 54, அந்த உதவித் தொகை பெற தகுதி பெறவில்லை என்று நிதி அமைச்சு தமக்குக் கடிதம் அனுப்பி வைத்திருந்ததாகக் கூறினார்.
“கடந்த ஏழாண்டுகளாக எனக்கு நிரந்தர வருமானம் இல்லை.அரசாங்கம் எனக்குப் பணம் கொடுக்கவில்லையா, பரவாயில்லை.ஆனால், யாருக்கு மிகவும் தேவைப்படுகிறதோ அம்மக்களுக்கு அவ்வுதவி கிடைப்பதைத் தடுக்காதீர்கள்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.
இடக்கையைப் பயன்படுத்த முடியாது போனதால் வேலை கிடைப்பது கடினமாகவுள்ளதென தேவி மலேசியாகினி டிவி நேர்காணலில் கூறினார்.
தேவிக்கு வந்த கடிதத்தில் அவரின் சம்பளம் ரிம3,000க்குக் குறைந்ததல்ல என்று குறிப்பிடப்பட்டிருந்தது.அதைவிட மோசமாக, தேசிய பதிவுத் துறை(ஜேபிஎன்)யில் அவரது பெயரே இல்லையாம்.
ஆனால், அவர் தாம் குடிமகன்தான் என்பதை நிரூபிக்க தம் அடையாள அட்டையைக் காண்பித்தார்.
‘ஜேபிஎன் நான் மலேசியன் அல்லன் என்கிறது’
“ஜேபிஎன் சொல்வதைப் பார்த்தால் நான் மலேசியன் அல்ல, இந்நாட்டின் வாக்காளர்களில் ஒருவன் அல்ல என்றாகிறது.
“நாடு வளர்ச்சி கண்டபிறகு என்னைப் போன்றவர்களை ஒழித்துக்கட்டப் பார்க்கிறார்கள்”, என்றவர் கூறினார்.
தேவி, நான்கு பிள்ளைகளுக்குத் தந்தை. அற்றைகூலிக்கு வேலைசெய்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். பிள்ளைகளில் இருவர் வேலை செய்கின்றனர். மற்ற இருவருக்கு பள்ளிசெல்லும் வயது.ஆனால், அவர்களின் படிப்புக்குக்கூட பணம் கொடுக்க முடியாமல் தவிக்கிறார் அவர்.
மாத வருமானம் ரிம 3,000-க்கும் குறைவாகவுள்ள குடும்பங்களுக்குக் கொடுக்கப்படும் உதவித் தொகைதான் பிஆர்1எம். ஒரே ஒருமுறை மட்டுமே அது கொடுக்கப்படுகிறது.
கடந்த மாதம், பெரா மசீச தொகுதித் தலைவர் டாங் ஹொக் லொக்-குக்கு ( அவர் ஒரு டத்தோவும்கூட) ரிம 500 வழங்கப்பட்டதைக் கண்டு பலரும் வியப்படைந்தனர். ஆனால், டாங் அதில் மோசடி எதுவும் இல்லை என்றும் மற்றவர்களுக்குக் கொடையாக வழங்கவே அதற்கு விண்ணப்பம் செய்ததாகவும் விளக்கினார்.