குவாந்தான் கெபெங்கில் அரிய மண் தொழில் கூடம் அமைவது மீது கருத்துத் தெரிவித்தவர்களில் 97 விழுக்காட்டினர் ஒப்புதல் அளித்தனர் என்று கூறும் கருத்துக்கணிப்பின் “ஆதாரம் துல்லிதம்” ஆகியவை குறித்து கெரக்கான் இன்று ஐயம் தெரிவித்துள்ளது.
அந்தக் கருத்துக் கணிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட வழி முறை பற்றி அந்தக் கட்சியின் இளைஞர் பிரிவுச் செயலாளர் டொமினிக் லாவ் இன்று விடுத்த ஒர் அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்காலிக நடவடிக்கை அனுமதி கோரி லினாஸ் சமர்பித்த விண்ணப்ப ஆவணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த போது மொத்தம் 334 பேர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். அவர்களில் மூன்று விழுக்காட்டினர் மட்டுமே அந்தத் தொழில் கூடத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக அணு எரிபொருள் அனுமதி வாரியம் கூறியிருந்தது.
கருத்துக் கூறியவர்கள் எண்ணிக்கை பற்றியும் அதிகாரிகள் எப்படி அந்த முடிவுக்கு வந்தனர் என்பது பற்றியும் லாவ் கேள்வி எழுப்பினார்.
“எங்களைப் பொறுத்த வரையில் லினாஸுக்கு எதிராக குவாந்தானில் அண்மையில் நிகழ்ந்த Perhimpunan Hijau 3.0 பேரணியில் 20,000 பேர் கலந்து கொண்டதை பத்திரிக்கைகளைப் படிக்கும் பலருக்குத் தெரிந்திருக்கும்.”
“அந்த 20 ஆயிரம் மக்களே அந்த மூன்று விழுக்காட்டினர் என நீங்கள் சொல்ல முடியாது இல்லையா ?”
கடந்த ஜனவரி 3ம் தேதியிலிருந்து 26ம் தேதி வரையில் லினாஸின் விண்ணப்ப ஆவணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அது சிறிய எண்ணிக்கையிலான இடங்களில் மட்டுமே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
சம்பந்தப்பட்ட ஆவணங்களை பார்க்கும் மக்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதே அதன் நோக்கம் எனக் குறை கூறப்பட்டது.
அந்தத் தொழில் கூடம் சுகாதாரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் மக்கள் அந்த விவகாரத்தை “இன்னும் வெளிப்படையான முறையில் கையாள வேண்டும்” என லாவ் கேட்டுக் கொண்டார்.
நாட்டின் “சுகாதாரமும் பாதுகாப்பும் அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்கும்” என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கும் முன்னர் மக்களுடைய பாதுகாப்புக்கும் சுகாதாரத்துக்கும் மருட்டல் ஏற்படாமல் இருப்பதை அரசாங்கம் முதலில் உறுதி செய்ய வேண்டும்,” ஆளும் பிஎன் கூட்டணியில் உள்ள ஒர் உறுப்புக் கட்சியுமான கெரக்கானின் இளைஞர் தலைவர் குறிப்பிட்டார்.
அந்த லினாஸ் தொழில் கூடத்தின் கழிவுப் பொருட்களை ஆஸ்திரேலியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கு அல்லது மக்கள் குறைவாக வசிக்கும் பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்கு அரசாங்கம் முன் வந்துள்ளது.
என்றாலும் அந்தக் கழிவுப் பொருட்கள் ஆபத்தானவை என்பதை அரசாங்கம் ஒப்புக் கொள்வதை அது பிரதிபலிப்பதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர்.