சாலைத் தடுப்பு ஒன்றில் இரண்டு நாட்களுக்கு முன்பு 14 வயதான மோட்டார் சைக்கிளோட்டியை “உதைத்தாக” கூறப்படும் போலீஸ்காரர் ஒருவருடைய படங்களை இணையத்தில் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் பார்த்துள்ளனர். அந்தச் சம்பவத்தில் அந்த மோட்டார் சைக்கிளோட்டி கடுமையாகக் காயமடைந்துள்ளார்.
வன்முறை எனக் கூறப்படும் அந்தச் சம்பவம் மீது ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் ஆத்திரத்தையும் இணையத்தில் கொட்டியுள்ளனர்.
ஜோகூர் லேடாங், தாமான் தங்காக் ஜெயாவில் நிகழ்ந்த அந்தச் சம்பவம் பற்றி இன்று சீன மொழி நாளேடுகளில் முதல் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று லிம் ஹப் ஹுவாங் என அடையாளம் கூறப்பட்ட அந்த மோட்டார் சைக்கிளோட்டி தலைக்கவசம் ஏதுமில்லாமல் மாலை மணி 5.50 வாக்கில் சாலைத் தடுப்பை அடைந்ததாக குவோங் வா யிட் போ கூறியது.
லிம்-மை நிறுத்த முயன்ற அந்த போலீஸ்காரர் மோட்டார் சைக்கிளை உதைத்ததாக சொல்லப்படுகிறது. அதனால் அந்தச் சிறுவன் நிலை தடுமாறி கீழே விழுந்து சாலை மேடையில் மோத நேரிட்டது.
லிம் முதலில் தங்காக் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மலாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு மாற்றப்பட்டார். காரணம் அவருக்குத் தலையிலும் வலது காதிலும் கழுத்திலும் வலது காலிலும் உடம்பின் மற்ற பகுதிகளிலும் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
“இதுதான் அந்தப் போலீஸ்காரர்! என் சகோதரர் தலைக்கவசத்தை அணியாததால் அவர் மோட்டார் சைக்கிளை உதைத்தார். அவர் என் சகோதரர் மீது குற்றப்பதிவு செய்ய முடியும் என்னும் போது அவர் ஏன் என் 14 வயது சகோதரருக்கு அதனைச் செய்தார்?” என லிம்-மின் மூத்த சகோதரி முக நூல் பதிவில் எழுதியுள்ளார். அந்தப் பதிவுடன் போலீஸ்காரருடைய படமும் இணைக்கப்பட்டுள்ளது.
“என் சகோதரருக்கு கழுத்திலும் தலையிலும் ரத்தம் உறைந்துள்ளது. காதில் ரத்தம் வடிந்து கொண்டிருக்கிறது. அவர் சுய நினைவின்றி இருக்கிறார். அவருக்கு உடம்பு முழுவதும் தையல் போடப்பட்டுள்ளது!”
லிம் மருத்துவமனையில் படுத்திருக்கும் பல படங்களும் முக நூலில் வெளியிடப்பட்டுள்ளன.
“என் சகோதரர் மோட்டார் சைக்கிளைக் கொண்டு தம்மை மோத முயன்றதால் தாம் உதைத்தாக அந்த போலீஸ்காரர் வாதாடினார். நல்ல வேளையாக அவரது கூற்றை மறுப்பதற்கு எங்களிடம் நேரில் பார்த்த மூவர் உள்ளனர். மிக்க நன்றி”, என்று சகோதரி தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே லிம்-மின் தந்தையார் போலீஸில் புகார் செய்துள்ளார். உள்ளூர் மசீச தலைவருடைய உதவியுடன் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் அவர் தயாராகி வருகிறார்.
அந்தச் சம்பவம் பற்றிக் கருத்துரைக்க லேடாங் ஒசிபிடி ஹருண் இட்ரிஸ் மறுத்து விட்டார். ஆனால் மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். போலீஸ் விரைவில் விசாரணைகளை மேற்கொள்ளும் என்றார் அவர்.