எதிர்த்த இருவர் ஆட்சி மன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக் கொண்டனர்

பாஹ்ரோல்ராஸியும் இஸ்மாயில் சாலேயும் ஆட்சி மன்ற உறுப்பினர் நியமனங்களை ஏற்றுக் கொள்வர்.  அதனால் கெடா பாஸ்-ஸில் எழுந்த தலைமைத்துவ நெருக்கடி தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சியின் ஆட்சி மன்ற உறுப்பினர்களைக் கண்காணிக்க நடவடிக்கைக் குழு ஒன்றை அமைக்க பாஸ் மத்தியக் குழு ஒப்புக் கொண்டதில் தாங்கள் மன நிறைவு அடைந்துள்ளதாக தாமும் தமது சகாவும் பாஹ்ரோல்ராஸி நேற்று பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

திறந்த மனதுடன் ஆட்சி மன்ற உறுப்பினர் பதவியை தாங்கள் ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்ட அவர் தங்களது நோக்கங்களை அடைந்து விட்டதாகவும் சொன்னார்.

அந்த நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளதின் மூலம் மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக் இனிமேல் கட்சித் தலைவர்களுடைய கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“கிளந்தானில் முன்பு அது போன்ற நடவடிக்கைக் குழு ஒன்று இயங்கியது. கெடாவில் ஏன் அது போன்று இல்லை என்பது எனக்கு வியப்பைத் தந்தது.”

கெடா மந்திரி புசாராக அஜிஸானைத் தொடர்ந்து நிலை நிறுத்துவது என அலோர் ஸ்டாரில் கடந்த சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாஸ் மத்தியக் குழு நேற்றுக் காலை அறிவித்தது.

TAGS: