பெட்ரோனாஸ் ஆதாயம் சரிவு, நிச்சயமற்ற சூழ்நிலைகள் குறித்து எச்சரிக்கை

கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி முடிந்த மூன்று மாதங்களில் பெட்ரோனாஸுக்கு கிடைத்த ஆதாயம் 15.6 பில்லியன் ரிங்கிட் ஆகும். 2010ம் ஆண்டு அதே காலத்தில் பதிவான ஆதாயம் 23.7 பில்லியன் ரிங்கிட் ஆகும். அந்த ஆதாயச் சரிவு 34 விழுக்காட்டு வீழ்ச்சியைக் குறித்தது.

அந்தத் தகவல் பெட்ரோனாஸ் நேற்று விடுத்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. உலகப் பொருளாதார நிலவரம் உறுதியற்றதாக இருப்பதால் எதிர்காலம் சவால் மிக்கதாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோனாஸின் இரண்டு துணை நிறுவனங்கள் பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்பட்டதால் ஒரு முறை மட்டும் 9.2 பில்லியன் ரிங்கிட் ஆதாயம் கிடைத்தது. ஆதாயம் வீழ்ச்சி கண்டதற்குக் காரணம் என அந்த அறிக்கை குறிப்பிட்டது.

என்றாலும் பெட்ரோனாஸுக்கு டிசம்பர் 31ம் தேதி முடிந்த 9 மாதங்களில் கிடைத்த 55.6 பில்லியன் ரிங்கிட் ஆதாயம் அதற்கு முந்திய ஆண்டு அதே காலத்தில் கிடைத்த ஆதாயத்தை விட 10.6 விழுக்காடு அதிகமாகும். அதற்கு சுத்திகரிக்கப்படாத எண்ணெய் விலை ஏற்றமும் விற்பனையும் காரணங்களாகும்.

அந்த ஒன்பது மாதங்களில் பதிவான 222.80 பில்லியன் ரிங்கிட் மொத்த வருமானம் 26.9 விழுக்காடு ஏற்றத்தை குறித்தது.

என்றாலும் ஐரோப்பிய பொருளாதாரப் பிரச்னைகள், சுத்திகரிக்கப்படாத எண்ணெய் உற்பத்தி குறைவு ஆகியவற்றால் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் விலைகள் நிலையற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் பெட்ரோனாஸுக்கு கடுமையான சவால் மிக்க ஆண்டுகளாக இருக்கும் என பெட்ரோனாஸ் தலைமை நிர்வாக அதிகாரி சம்சுல் அஸ்ஹார் அபாஸ் எச்சரித்தார்.

“ஐரோப்பா மந்த நிலைக்குள் சென்று கொண்டிருக்கிறது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகியவற்றின் தேவைகள் குறைந்து கொண்டிருக்கின்றன. அத்துடன் மத்திய கிழக்கிலும் பதற்ற நிலை அதிகரிக்கிறது.”

இந்த ஆண்டு சுத்திகரிக்கப்படாத எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 85 அமெரிக்க டாலருக்கும் 90 அமெரிக்க டாலருக்கும் இடையில் இருக்கும் என சம்சுல் எதிர்பார்க்கிறார்.

நடப்பு விலை பீப்பாய் ஒன்றுக்கு 110 அமெரிக்க டாலர் ஆகும். 2014ம் ஆண்டு எண்ணெய் விலை பெரும்பாலும் ஏற்றம் காணலாம்.

நாட்டில் எண்ணெய் எரி வாயு வளங்கள் அருகி வருவதால் ஆழ்கடலில் ஆய்வுகளை மேற்கொள்ளும் என அவர் சொன்னார். அத்துடன் நடப்பிலுள்ள எண்ணெய் வளப் பகுதிகளிலும் மறு ஆய்வு மேற்கொள்ளப்படும்.

“2012ல் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் உற்பத்தி குறையும் என எதிர்பார்க்கப்படுவதால் ” உற்பத்தியே எங்களுக்கு சவாலாக இருக்கும்” என்றார் அவர்

பெட்ரோனாஸ்- நாட்டின் மொத்த வரவு செலவுத் திட்ட வருமானத்தில் கிட்டத்தட்ட பாதியை வழங்குகிறது.

ஏஎப்பி