அன்வார்: தாக்குதல் தொடுப்பதற்கு முன்பு மாட் சாபுவை விளக்குவதற்கு அனுமதியுங்கள்

பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு, புக்கிட் கெப்போங் குறித்த தமது கருத்து மீது விளக்கமளிப்பதற்கு அனுமதிக்காமல் அவர் மீது அம்னோவுக்கு சொந்தமான ஊடகங்கள் தாக்குதலைத் தொடுத்துள்ளதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் சாடியிருக்கிறார்.

அந்த விஷயத்தில் எந்த முடிவுக்கும் வருவதற்கு முன்னர் மாட் சாபுவின் விளக்கத்தைச் செவிமடுக்க விரும்புவதாக அவர் சொன்னார்.

அம்னோ ஊடகங்கள் தம்மை கம்யூனிஸ்ட் ஆதரவாளர் என “போலியாக” சித்தரிப்பதைத் தவிர்ப்பதற்கு அது உதவும் என்றார் அவர்.

மாட் சாபு தமது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அதனால் அதனை விளக்க அவருக்கு வாய்ப்பளிப்பதே நியாயமானது, பொருத்தமானது என அன்வார் கருதுகிறார்.

அவர் குபாங் செமாங்கில் நேற்று பினாங்கு துணை முதலமைச்சர் மான்சோர் ஒஸ்மான் வழங்கிய நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் நிருபர்களிடம் பேசினார்.

“மாட் சாபு நிகழ்த்திய உரையை நான் வீடியோவில் செவிமடுத்துள்ளேன். நோன்புப் பெருநாள் காலத்தில் அம்னோ ஊடகம் இத்தகைய ‘விளையாட்டில்’ ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது.”

தமக்கு எதிராக சுமத்தப்பட்ட எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் மறுத்து மாட் சாபு விடுத்த அறிக்கையையும் நான் பார்த்துள்ளேன் என்றும் அன்வார் சொன்னார்.

“அது உணர்ச்சிகரமான விஷயம் என்பது எனக்குத் தெரியும். பலர் தியாகம் புரிந்துள்ளதாக மலாய் சமூகம் கருதுகிறது. அது வரலாற்று உண்மை”, என்றும் அவர் குறிப்பிட்டார்.

“பல விளக்கங்கள் இருந்தால், மக்கள் விளக்கம் அளிப்பதற்கு இடம் கொடுங்கள். அப்போதுதான் நாம்  சரியான தகவலைப் பெற முடியும்.”

சர்ச்சைக்கு காரணம் என்ன?

ஆகஸ்ட் 21ம் தேதி தாசெக் குளுகோரில் மாட் சாபு ஆற்றிய உரையின் ஒரு பகுதி:

“மெர்தேகா நெருங்கி வரும் போது புக்கிட் கெப்போங் பற்றி நிறைய கதைகள் பேசப்படும். புக்கிட் கெப்போங்கில் மரணமடைந்த போலீசார் பிரிட்டிஷ் போலீஸ்காரர்கள் ஆவர்.

“புக்கிட் கெப்போங்கைத் தாக்கியவர்களே உண்மையான சுதந்திரப் போராட்ட வீரர்கள். புக்கிட் கெப்போங் மீது தாக்குதல் நடத்தியது மாட் இந்ரா (முகமட் இந்தரா) ஆவார் அவர் மலாய்க்காரர். ஆனால் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது.

“திரைப்படத்தை தயாரித்த ஜின்ஸ்  சம்சுதீன் அம்னோ ஆள். புக்கிட் கெப்போங் கதையில் (சும்சுதீன் தயாரித்தது) தாக்குதல் நடத்தியவர்கள் கிரிமினல்கள் என சித்தரிக்கப்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்தை தற்காத்தவர்கள் வீரர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. உண்மையில் அந்த நடவடிக்கைக்குத் தலைமை தாங்கிய மாட் இந்ரா தூக்கிலிடப்பட்டார்.”

மலாய் வாசகம்:

“Dekat nak merdeka nanti, siarlah cerita mengenai Bukit Kepong. Bukit Kepong ini, polis yang mati itu polis British.

Hat (yang) serang Bukit Kepong itulah pejuang kemerdekaan yang sebenar, yang serang Bukit Kepong itu Mat Indra (Muhammad Indera). Dia Melayu tapi semua sejarah itu ditutup.

“Jins Shamsudin (Tan Sri) buat filem, Jins Shamsudin ituUMNO. Cerita Bukit Kepong (yang dibuat Jins) hat serang itu pula penjahat, hero yang mempertahan balai polis. Padahal Mat Indera  yang mengetuai operasi itu akhirnya dihukum gantung”, katanya dalam ceramah itu.