தூய்மையான நல்ல ஆளுமை கோரி மார்ச் 18ம் தேதி பெட்டாலிங் ஜெயா சாலைகளில் 5,000க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாகச் சென்று பொதுத் திடல் ஒன்றில் ஒன்று கூடுவர்.
நாங்கள் 5,000 பெண்களை எதிர்பார்க்கிறோம். நாங்கள் மூன்று இடங்களில் கூடி ஆஸ்தாக்கா திடலை நோக்கி நடந்து செல்வோம்,” என ஏற்பாட்டாளரான ஹோ யோக் லின் மலேசியாகினியிடம் கூறினார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏசியா ஜெயா, தாமான் ஜெயா எல்ஆர்டி நிலையங்களிலும் செக்சன் 14ல் உள்ள துன் அப்துல் அஜிஸ் பள்ளிவாசலிலும் பிற்பகல் 2 மணி வாக்கில் கூடுவர் என்றும் அதற்குப் பின்னர் Amcorp கடைத் தொகுதிக்கு முன்பு அமைந்துள்ள ஆஸ்தாக்கா திடலுக்கு ஊர்வலமாகச் செல்வர் என்றும் அவாம் என்ற அனைத்து மகளிர் நடவடிக்கை இயக்கத்தின் துணைத் தலைவியான ஹோ கூறினார்.
ஆஸ்தாக்கா திடலில் அந்த மகளிர், பல பிரமுகர்கள் ஆற்றும் உரைகளை செவிமடுப்பதுடன் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் பாடல்களையும் பாடுவர். அத்துடன் சுலோகங்களையும் முழங்குவர்.
அந்த நிகழ்வு தொழிலாளர் உரிமைகளிலும் ஒராங் அஸ்லி மக்கள் அனுபவிக்கும் துயரங்களிலும் கவனம் செலுத்தும் என்றும் ஹோ சொன்னார்.
“நாங்கள் அந்த நிகழ்வு பற்றிப் போலீசாருக்குத் தெரிவித்துள்ளோம்,” என்றும் ஹோ குறிப்பிட்டார்.
ஊதா நிற ஆடைகளும் வெள்ளைக் கையுறைகளும்
அந்தப் பேரணியில் பங்கு கொள்கின்றவர்கள் மார்ச் 8ம் தேதி அனுசரிக்கப்படும் அனைத்துலக மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில் ஊதா நிற உடைகளை அணிந்திருக்க வேண்டும் அல்லது அதில் ஏதாவது ஒன்று அந்த நிறத்தில் இருக்க வேண்டும். அத்துடன் தூய்மையான ஆளுமைக்கான வேண்டுகோளைக் குறிக்கும் வகையில் வெள்ளை நிறக் கையுறைகளையும் அவர்கள் போட்டிருக்க வேண்டும்.
அவாம், மகளிர் உதவி நிறுவனம், இஸ்லாத்தில் சகோதரிகள், தெனாகானித்தா போன்ற பெரிய அரசு சாரா அமைப்புக்களின் உறுப்பினர்கள் அந்தப் பேரணியில் கலந்து கொள்வர் என ஹோ தெரிவித்தார்.
அந்த அரசு சாரா அமைப்புக்கள் 15 மகளிர் அமைப்புக்கள் இணைந்துள்ள Wanita Suara Perubahan (WanitasuperMY) என்னும் இயக்கத்தில் அங்கம் பெற்றுள்ளன.
ஊழல் இல்லாத அரசாங்கம், தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம், சிறந்த வாழ்க்கைத் தரம், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துவது, 2011ம் ஆண்டுக்கான அமைதியான கூட்டச் சட்டத்தை ரத்துச் செய்வது, தூய்மையான நேர்மையான பொதுத் தேர்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக Wanita Suara Perubahan அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
“நாங்கள் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பியுள்ளோம். அவை வந்தால் எங்களுடன் இணைந்து கொள்ளலாம்,” என்றும் ஹோ சொன்னார்.
“அந்தப் பேரணி தொடர்பில் இரண்டு நிகழ்வுகளை நடத்தவும் Wanita Suara Perubahan திட்டமிட்டுள்ளது.”
“தூய்மையான அரசாங்கத்தை நாங்கள் கோருவதைக் குறிக்கும் அடையாளமாக நாங்கள் ஒரு ஜோடி வெள்ளைக் கையுறைகளை அரசாங்கத்துக்கு அனுப்புவதற்காக கோலாலம்பூரில் உள்ள டயாபூமி அஞ்சலகத்துக்கு நாங்கள் மார்ச் எட்டாம் தேதி காலை 10 மணிக்குச் செல்வோம்.”
“மார்ச் 13ம் தேதி எங்கள் கோரிக்கைகளை கொடுப்பதற்காக நாடாளுமன்றக் கட்டிடத்துக்குச் செல்வோம்,” என்றார் ஹோ.