எதிர்க்கட்சி ஆதரவாளரான ஊனமுற்றவருக்கு உதவி நிறுத்தப்பட்டதை மொங், சரி என்கிறார்

எதிர்க்கட்சி ஆதரவாளரான குடியானவர் பூருஸிஸ் லெபி-க்கு வழங்கப்படும் உதவித் தொகைகளை நிறுத்துமாறு விவசாயத் துறைக்குத் தாம் உத்தரவிட்டதை சரவாக் மாநில விவசாயத் துணை அமைச்சர் மொங் டாஹாங், சரி எனச் சொல்லியிருக்கிறார்.

பூருஸிஸுக்கான உதவிகளை நிறுத்துமாறு சமூக நலத் துறைக்கு தாம் ஆணையிட்டதையும் புக்கிட் பெகுனான் சட்ட மன்ற உறுப்பினருமான மொங் ஒப்புக் கொண்டதாக ஆங்கில மொழி நாளேடான தி சன் செய்தி வெளியிட்டுள்ளது.

“கொள்கைப் பிடிப்புள்ள மனிதர் என்ற முரையில் நான் பின் வாங்கப் போவதில்லை,” என அவர் சொன்னார்.

“அவர் தீவிரமான எதிர்க்கட்சி ஆதரவாளராக இருப்பதால் அவருக்கு நாங்கள் தொடர்ந்து சமூக நல உதவியையும் மற்ற உதவித் தொகைகளையும் கொடுக்க முடியாது.”

பூருஸிஸ் நெல் விவசாயம் செய்ய முடியும். சாதாரண மனிதரைப் போல அவர் மோட்டார் சைக்கிளை ஓட்டுகிறார். ஆகவே சமூக நல உதவியை, அது அதிகம் தேவைப்படும் உடற்குறையுடைய மற்றவர்களுக்கு வழங்கலாம் என அந்தத் துணை அமைச்சர் சொன்னார்.

சமூக நல உதவி நிறுத்தப்பட்டது

51 வயதான பூருஸிஸ், தமக்கு வழங்கப்படும் எல்லா உதவிகளையும் நிறுத்துமாறு மொங் ஸ்ரீ அமான் விவசாயத் துறைக்கு ஆணையிடும் மொங் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றின் மீது கடந்த வெள்ளிக்கிழமை போலீசில் புகார் செய்தார்.

தமக்கு வழங்கப்பட்டு வந்த 300 ரிங்கிட் சமூக நல உதவி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறுத்தப்பட்டதாக பூருஸிஸ் தெரிவித்தார். அப்போது அவர் எதனையும் அறியவில்லை.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிகழ்ந்த சரவாக் மாநிலச் சட்டமன்றத் தேர்தலின் போது பூருஸிஸ் எதிர்க்கட்சிக்காக நடவடிக்கை அறை ஒன்றை அமைத்ததாக  மொங் தமது கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் அதனை பூருஸிஸ் மறுத்துள்ளார். எதிர்க்கட்சி கொடியை மட்டும் பறக்க விட்டதாகவும் அதனை பின்னர் கிராமத் தலைவர் அகற்றி விட்டதாகவும் அவர் கூறினார்.