“அரசாங்கம் அமலாக்குகின்ற கொள்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஏதும் நிகழ்ந்தால் நான் என் நண்பர்களிடம் ஆத்திரப்படுவேன்.”
பதில்களுக்கான தேர்வு- ‘முழுமையாக ஒப்புக் கொள்ளவில்லை, ஒப்புக் கொள்ளவில்லை, ஒப்புக் கொள்கிறேன் அல்லது முழுமையாக ஒப்புக் கொள்கிறேன்.’
சிலாங்கூரில் உள்ள கல்வித் துறை அதிகாரிகள் பதில் அளிக்குமாறு எல்லா ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள அரசியல் அடிப்படையைக் கொண்ட 10 கேள்விகளில் அதுவும் ஒன்றாகும்.
ஆசிரியர்களுடைய அரசியல் எண்ணங்களை மதிப்பீடு செய்வது அந்தக் கேள்விகளின் நோக்கம் என கருதப்படுகிறது.
“நடப்பு தேசிய தலைமைத்துவத்தில் பெரிய மாற்றம் நிகழுமானால் நான் கவலைப்படுவேன்,” என்பது அந்த 10ல் இன்னொன்றாகும்.
அதற்கும் தேர்வு செய்ய நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அந்த ஆய்வு பாரத்தில் பெயர்களை எழுத வேண்டாம் என கூறப்பட்டிருந்தாலும் கல்வி அதிகாரிகளின் அரசியல் நெருக்குதல் தாங்கள் கருதும் அந்த ஆய்வு மீது ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
“அரசாங்க உருமாற்றத் திட்டங்களின் திறன் குறித்த ஆய்வு” என அந்த ஆய்வுக்கு தலைப்பு எழுதப்பட்டுள்ளது.
அந்த ஆய்வுப் பாரம் மின் அஞ்சல் வழியாக வந்ததாகவும் ஆசிரியர்கள் பூர்த்தி செய்வதற்காக தமது பள்ளிக் கூடம் அதன் பிரதிகளை அச்சிட வேண்டியிருந்தது என்றும் அடையாளம் கூற விரும்பாத தலைமையாசிரியர் ஒருவர் கூறினார்.
அது நாடு முழுவதும் நடத்தப்படும் ஆய்வா என்பதும் தெரியவில்லை. என்றாலும் அந்த ஆய்வுப் பாரத்தைப் பூர்த்தி செய்யுமாறு கடந்த சில நாட்களாக சிலாங்கூரில் உள்ள ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்
பினாங்கில் உள்ள பள்ளிக்கூடங்களுடன் தொடர்பு கொள்ளப்பட்ட போது அந்த ஆய்வில் பங்கு கொள்ளுமாறு அவை கேட்டுக் கொள்ளப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
சிலாங்கூர் அம்னோ தலைவருமான பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு அந்த ஆய்வு குறித்துத் தெரியாமல் இருக்கலாம் என பள்ளிக்கூடத் தலைமையாசிரியர் ஒருவர் கூறினார்.
“சிலாங்கூரை மீண்டும் கைப்பற்றுவதற்கான முயற்சியின் கீழ் உணர்வுகளை மதிப்பீடு செய்ய சிலாங்கூர் அம்னோ மேற்கொண்டுள்ள நடவடிக்கையாகவும் அது இருக்கலாம்.”
ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் அடிப்படை மனித உரிமைகளை அந்த ஆய்வு மீறுவதாக தம்மை அடையாளம் கூற விரும்பாத ஓய்வு பெற்ற ஆங்கில மொழி ஆசிரியர் ஒருவர் கூறினார்.
“எதிர்வரும் பொதுத் தேர்தல் குறித்த போலீஸ், இராணுவ, தேசியப் பாதுகாப்பு மன்ற ஆரூடங்கள் துல்லிதமானவையா என்பதை உறுதி செய்ய அவர்கள் விரும்புவதாகத் தோன்றுகிறது,” என்றார் அவர்.
“அமலாக்கப்படும் அரசாங்கக் கொள்கைகள் மீது எதிர்மறையான கருத்துக்கள் ஏதும் உள்ளதாக என்பதைக் கண்டறிவதும் அந்த ஆய்வின் நோக்கமாக இருக்கலாம்.”
அரசாங்கச் சேவையில் ஆசிரியர்கள் பெரிய முக்கியமான அங்கமாகும்.